வெள்ளி, 24 மார்ச், 2017

தமிழர் நாகரீகத்தை உலகறியச் செய்த கீழடி அகழ்வாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் பணியிட மாற்றம்! March 24, 2017

தமிழர் நாகரீகத்தை உலகறியச் செய்த கீழடி அகழ்வாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் பணியிட மாற்றம்!


தமிழர்களின் பாரம்பரிய நாகரீகத்தை உலகறியச் செய்த கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வைகை ஆற்றங்கரை நாகரீகம் என புகழப்படும் வகையில் மதுரை அருகே கீழடியில் புதைந்திருந்த தமிழர் நாகரீகத்தை வெளிக்கொண்டு வந்தவர் தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன். தமிழகத்தைச் சேர்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாய்வு பணிகளுக்கான கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

வைகை ஆற்றங்கரையில் புதையுண்டிருந்த பழந்தமிழரின் நகரத்தை ஆய்வுகள் மூலம் கண்டறிந்த அமர்நாத் தலைமையிலான குழு, 110 ஏக்கர் தென்னந்தோப்பு அமைந்துள்ள பகுதியில் அகழ்வாய்வு மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி பெற்று அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு பணிகளின் வாயிலாக பழந்தமிழரின் பெருமைமிகு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் பல்வேறு விஷயங்களை கண்டறிந்து அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான அகழ்வாய்வுக்குழு வெளிப்படுத்தியது.

1 ஏக்கருக்கும் குறைவான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளிலேயே ஏராளமான அரிய தகவல்கள் வெளிவந்து தமிழரின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய தேவையை உலக அளவில் வலியுறுத்தி நின்றது. 

குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், சங்க கால இலக்கியங்கள் சொல்லக்கூடிய வகையில் நகர நாகரீகம் தமிழகத்தில் இல்லை என்ற கருத்தை கீழடி அகழாய்வு மாற்றிப் போட்டது. அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரீகம் கிமு 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது. இதன் மூலம் சங்க காலத்தில் நகரங்கள் இருந்தது என்பது உறுதியானது. இது பழந்தமிழரின் இலக்கியங்கள் மற்றும் வரலாற்றை நிரூபிப்பதில் தற்போது முக்கிய பங்காற்றி வருகிறது.


பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் மைசூருக்கு கொண்டு செல்லப்படுவது தடுக்கப்பட்டதுடன், அடுத்தக்கட்ட ஆய்வுகளை ஓராண்டிற்கு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில், கீழடி தொல்லியல் ஆய்வுகளுக்கு தலைமையேற்று நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழகத்தில் இருந்து அஸ்ஸாமிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு தனது புதிய கொள்கை முடிவுகளைக் காரணம் காட்டி இத்தகைய பணியிட மாற்றத்தை மேற்கொள்ள போதிலும், இது கீழடி அகழ்வாய்வுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.