வெள்ளி, 24 மார்ச், 2017

உணவுப் பிரச்னை பற்றி புகார் எழுப்பிய ராணுவ வீரர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி March 24, 2017




எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாக புகார் தெரிவித்த தேஜ் பகதூர், மரணமடைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. எனினும், அந்தப் புகைப்படங்கள் போலியானவை என்றும், தேஜ் பகதூர் உயிருடன் தான் இருக்கிறார் என்றும் அவரது மனைவி ஷர்மிளா யாதவ் விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக எல்லைப் பாதுகாப்பு படை செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான பரத்வாஜ் என்பவர் அளித்துள்ள விளக்கத்தில், தேஜ் பகதூர் நல்ல உடல்நிலையுடன் ஆரோக்கியமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் தேஜ் பகதூர் பணி அமர்த்தப்பட்டு இருப்பதாகவும் எல்லைப் பாதுகாப்பு படையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படத்தில், தேஜ்பகதூர் முக அமைப்பை போன்ற தோற்றமுடைய ராணுவ வீரர் உடையணிந்த நபர் கண்களை மூடிய நிலையில் இருப்பதைப் போன்று காணப்பட்டது. அந்த நபரின் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது போன்றும், முகத்தின் ஒரு பகுதி துணியால் மூடப்பட்டும் இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என எல்லைப் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.