வெள்ளி, 24 மார்ச், 2017

விமான பணியாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி விமானங்களில் செல்ல தடை! March 24, 2017

விமான பணியாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி விமானங்களில் செல்ல தடை!


டெல்லி விமானத்தில் பயணம் செய்த போது பணியாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி. விமானங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ஒஸ்மானாபாத் தொகுதி எம்.பி., ரவிந்திர கெயிக்வாட் புனேயிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றார். அப்போது பிஸினஸ் க்ளாஸில் இருக்கை பதிவு செய்திருந்த சிவசேனா எம்பிக்கு, எக்னாமிக் பிரிவில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரவிந்திர கெயிக்வாட், ஏர் இந்தியா ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பணியில் இருந்த சீனியர் மேனேஜர் சுகுமாரை செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய சுகுமார், சிவசேனா எம்.பி தகாத வார்த்தைகளால் திட்டி தம்மை செருப்பால் அடித்ததுடன், கண் கண்ணாடியையும் உடைத்து விட்டதாக வேதனை தெரிவித்தார். இவர் போன்றவர்களிடம் இருந்து இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் எனவும் சுகுமார் வேதனை தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா அளித்த புகாரின் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கெயிக்வாட், ஏர் இந்தியா ஊழியர் தம்மிடம் தவறாக நடந்து கொண்டதால் 25 முறை செருப்பால் அடித்ததாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் தான், சிவசேனா எம்.பி., என்றும், பா.ஜ.,வை சேர்ந்தவன் அல்ல என்றும் எள்ளி நகையாடினார். 

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி, இதுபோன்ற சம்பவங்களை எந்த கட்சியும் ஆதரிக்கக்கூடாது என்றும், இந்த சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது எனவும் அறிவுறுத்தினார். 

இந்த சம்பவத்திற்கு பாஜக, காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி சிவசேனா எம்.பி.,ரவிந்திர கெயிக்வாட்க்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, விமானப் பயணியை தாக்கிய சிவசேனா எம்.பி.யை தங்களது நிறுவன விமானங்களில் ஏற்ற மாட்டோம் என விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவரது பெயரை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.