திருவள்ளூரில் தவறான சிகிச்சையால் குழந்தை பலியானதாக கூறி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மணவாளநகரை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. விவசாயியான இவர் தனது மனைவி சரண்யா கர்ப்பமானதையடுத்து திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக பரிசோதனை செய்து வந்தனர். இந்நிலையில் பரிசோதனைக்கு வந்தவர்களிடம், இன்று சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக கூறி, சரண்யாவை மருத்துவமனையில் சேர்க்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆரம்பத்தில் சுகப்பிரசவம் என்று தெரிவித்த மருத்துவர்கள் திடீரென அறுவை சிகிச்சை செய்யக்கோரி விநாயகமூர்த்தியிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சை தொடங்கிய நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், 45 நிமிடம் காலதாமதமானதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அறுவை சிகிச்சையை தொடர்ந்து குழந்தை இறந்தே பிறந்ததாக மருத்துவர் கூறியதால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவர்களை கலைந்துப்போக செய்தனர்.