புதிய தொழில்நுட்பங்களுக்குத் தயாராவதில் உள்ள சிரமங்களால், அடுத்து வரும் மூன்றாண்டுகளில், ஐடி பணியாளர்களும் பொறியாளர்களும் லட்சக்கணக்கில் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, ‘ஹெட் ஹன்டர்ஸ் இந்தியா’ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
’ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 பொறியாளர்கள் வேலை இழப்பர் என ஊடகங்கள் யூகங்கள் தெரிவித்தாலும், ஆய்வின்படி புதிய தொழில்நுட்பங்களுடன் ஒன்றுவதில் உள்ள சிரமங்களால், ஒவ்வொரு ஆண்டிலும் 1.75 லட்சத்திலிருந்து 2 லட்சம் பேர் வரை வேலை இழப்பர்’ என ‘ஹெட் ஹன்டர்ஸ் இந்தியா’ அமைப்பின் நிறுவனர் லக்ஷ்மிகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நாஸ்காம் இந்தியா தலைமைப்பண்பு மாநாட்டில், ஐடி துறைப் பணியாளர்கள் சந்திக்கவிருக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், அடுத்த மூன்றாண்டுகளில் ஐடி துறையில் பணியாற்றும் பலரும் தேவையற்றவர்களாகி விடுவார்கள். நவீன தொழில்நுட்ப மாற்றங்களால், 50-60 சதவிகிதம் வரையிலான பணியாளர்களைத் தக்கவைப்பதில் நிறுவனங்கள் கடும் சவால்களைச் சந்திக்க நேரிடும். புதிதாகக் கற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களால், 35 வயதுக்கு மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் வேலை இழக்கும் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைப்பதிலும் பல சிரமங்கள் உள்ளன’ எனக் குறிப்பிட்டு, மெக்கின்ஸி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களின் திறனை மேம்படுத்தி, அவர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென எந்த மென்பொருள் நிறுவனமும் தயாராக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி நீக்க அபாயம் பெங்களூரூ, மும்பை போன்ற பெரு நகரங்களில் ஏற்பட வாய்ப்பில்லை என்றபோதிலும், கோவை போன்ற நகரங்களில் பலர் வேலையிலிருந்து நீக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://kaalaimalar.in/it-employs-2-lack/