திங்கள், 29 மே, 2017

பாலில் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை! May 29, 2017




பாலில் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரித்துள்ளார்.

தனியார் பாலில் ரசாயனக் கலப்பு தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜேந்திர பாலாஜி, கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்தார். பாலில் உரம், கிழங்கு மாவு, சோடா போன்றவற்றை  தனியார் நிறுவனங்கள் கலப்படம் செய்கின்றன என குற்றம்சாட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் ரசாயனக் கலப்பு என்பது மெல்ல மெல்ல மனிதர்களை கொல்லும் விஷம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தனியார் பால் நிறுவனங்களை பழிவாங்குவது தனது நோக்கமல்ல எனக் கூறிய ராஜேந்திர பாலாஜி, கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆவின் பாலில் கலப்படம் எதுவுமே இல்லை என்றும், ஆவின் பால் மீது 4 கட்ட சோதனையிலும் இது உறுதியாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், 10 நாட்கள் கெடாத பாலை கொடுக்கும் மாடு எது? என்று கூறுங்கள் எனவும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் நிறுவனங்களுக்கு  கேள்வி எழுப்பினார்.

சோதனைக்கு பாலை அனுப்பும் முன்பே தனியார் நிறுவன ஆள் சென்றுவிடுகின்றனர் என குற்றம்சாட்டிய அமைச்சர், ஆய்வு முடிவுகள் குறித்து ரகசியம் காப்பது அவசியம் என்றும், இல்லையென்றால் தனியார் பால் நிறுவனங்கள் ஆய்வு முடிவுகளையே மாற்றிவிடக் கூடும் என்றும் கூறினார்.