கோஹிமா: மாட்டிறைச்சி உண்பதை தடை செய்ய பாரதிய ஜனதா கட்சி விரும்பினால் நாகாலாந்து தனி நாடாகிவிடும் என்று அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. தெரிஇ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை கொந்தளிக்க வைத்துள்ளன. கேரளா மாநில அரசு முழு வீச்சில் மத்திய அரசின் தடையை எதிர்த்து போராடி வருகிறது.
தமிழகத்திலும் மத்திய அரசுக்கு எதிராக மாட்டிறைச்சி உண்ணும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதேநேரத்தில் கேரளாவில் தனி திராவிட நாடு கோஷமும் முன்வைக்கப்பட்டு அது அடங்கிப் போனது.
வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி பிரதான உணவுப் பொருளாகும். இதனால் வடகிழக்கு மாநிலங்கள், மத்திய அரசின் புதிய சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசின் தடை சட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த நாகாலாந்து காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தெரிஇ, மாட்டிறைச்சி உண்பதை பாஜக தடை செய்ய விரும்பினால் இந்தியாவில் இருந்து நாகாலாந்து பிரிந்து தனிநாடாகிவிடும் என ஒரே வரியில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகாலாந்து காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
http://kaalaimalar.in/beef-baaned-nagaland-country-congress/