புதன், 31 மே, 2017

குடியரசுத் தலைவர் வேட்பாளர்: ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை!

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வதில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒருகட்டமாக, பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா, நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமையிடத்திற்குச் சென்று அதன் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பி.ஜே.பி விரும்புகிறது. பொதுவாக குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்று ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் விரும்பும். ஆனால், சில நேரங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படும் நிலையில், தேர்தல் நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
தற்போதைய நிலையில் மக்களவையில் போதிய பலம் பி.ஜே.பி-க்கு இருந்தபோதிலும், மாநிலங்களவையில் இன்னமும் பி.ஜே.பி. பெரும்பான்மை பெறவில்லை. இதேபோல், குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வாக்குகள் எதிராகவே பதிவாகும். காங்கிரஸ், பி.ஜே.பி அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி, அந்தந்தக் கட்சிகளின் தலைவர்கள் முடிவெடுத்து, கட்சி எம்.எல்.ஏ-க்கள், எம்.பி.க்களுக்கு உத்தரவிடுவார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, பி.ஜே.பி சார்பில் யாரை குடியரசுத் தலைவராக நிறுத்தினாலும், அவரை ஆதரிக்க ஆளும் அ.தி.மு.க-வின் இரு அணிகளும் தயாராகவே உள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, பி.ஜே.பி அல்லாத இதரக் கட்சிகளின் தலைவர்களை அழைத்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பி.ஜே.பி. சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துடன், அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
இந்தச் சந்திப்பை உறுதி செய்த ஆர்.எஸ்.எஸ். செய்தித்தொடர்பாளர் மன்மோகன் வைத்யா, அமித் ஷாவுடனான மோகன் பகவத் சந்திப்பின்போது அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷியும் இருந்ததாகத் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ரீதியான மாற்றறங்கள், பி.ஜே.பி-யின் முக்கியத் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தவுள்ள வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்படவுள்ள வேட்பாளர் யார் என்பதை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கு முன், ஆர்.எஸ்.எஸ் தலைவருடன் அமித் ஷா முதல்கட்ட ஆலோசனை நடத்தியிருப்பதாகவே தெரிகிறது.
இந்நிலையில், நாட்டின் முதல் குடிமகனாக பழங்குடியினப் பெண் ஒருவரைத் தேர்வு செய்ய பி.ஜே.பி திட்டமிட்டுள்ளது. அதன்படி, தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக உள்ள திரெளபதி முர்மு-வை வேட்பாளராக அறிவிக்க பி.ஜே.பி முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2002-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஒடிஷா அமைச்சரவையிலும் இவர் இடம்பெற்றுள்ளார். பி.ஜே.பி-யின் பழங்குடியினப் பிரிவின் உறுப்பினராகவும், தேசிய நிர்வாகக்குழுவிலும் திரெளபதி முர்மு இருந்தவர். அப்படி இவரை குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தும்போது, முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீல் தேர்வானதைப் போன்று, பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவராக இவர் தேர்வு செய்யப்படுவார்.
காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளும், இவருக்கு வேறு வழியின்றி ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். மேலும் குடியரசுத் தலைவரை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த பெருமையும் பி.ஜே.பி.-க்கு கிடைக்கும் என்று பிரதமர் மோடியும், பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவும் கருதுகிறார்கள். குடியரசுத் தலைவர் வேட்பாளர் பெயரை அறிவிக்கும் வரை சஸ்பென்ஸை கடைபிடிக்கவே பி.ஜே.பி விரும்புகிறது. வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் வரை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மவுனமாக இருக்கவே விரும்புகின்றன.
ஓரிரு தினங்களில் குடியரசுத் தலைவர் தேர்தலில் யார் வேட்பாளர் என்பது தொடர்பான சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கலாம்.

http://kaalaimalar.in/amit-sah-rss-meet-elections-select-govt/