புதன், 31 மே, 2017

இப்ப அடி பார்ப்போம்.. ஐஐடி முன் மாட்டுக்கறி சாப்பிட்டு தந்தை பெரியார் தி.க. அதிரடி!

சென்னை: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விழா மாணவர்களால் நடத்தப்பட்டது. இதனால் கடுப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபியினர், விழா நடத்திய சூரஜ் என்ற மாணவரை காட்டுமிராண்டித் தனமாக தாக்கினார்கள்.
இதனை கண்டித்து தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை ஐஐடி வளாகத்தின் முன் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை நடத்தினார்கள். ஐஐடி வளாகம் அருகில் 50க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஒன்று கூடி மாட்டுக்கறியை கொண்டு வந்து தின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டுக்கறி தடைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்தும், மாட்டிறைச்சி தடையை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
அப்பாவி மாணவர் மாட்டிறைச்சி விழா நடத்தியதற்காக தாக்கப்பட்டுள்ளார். அவருக்கு முறையான மருத்துவம் செய்யப்பட வேண்டும். கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட ஏபிவிபியை தடை செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தினர் அனைவரையும் போலீசார் இழுத்துச் சென்று கைது செய்தனர். அடுத்தடுத்து பல மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் ஐஐடி வளாகம் முன்பு பதற்றம் நிலவி வருகிறது.