ஹரித்வார் : பதஞ்சலி நிறுவன பொருட்களில் 40 சதவீதம் பொருட்கள் முழுமையான ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.
பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் சொந்த நிறுவனமான பதஞ்சலி மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
பதஞ்சலி தயாரிப்புப் பொருள்கள் ரசாயனக் கலப்பு இல்லை என்றும், இயற்கையாக உள்நாட்டில் தயாராகும் பொருட்கள் என்றும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் ஏராளமான மக்கள் நம்பிக்கையுடன் பதஞ்சலி பொருட்களை வாங்கி சென்று பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், பதஞ்சலி நிறுவனப் பொருட்கள் தரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்கப்பட்டது. இதில் 2013- 2016 காலகட்டத்தில் ஹரித்வாரில் இருந்து தயாரிக்கப்படும் 82 ஆயுர்வேதப் பொருட்களின் மாதிரியை எடுத்து ஹரித்வார் ஆயுர்வேதா மற்றும் யுனானி அலுவலகம் சோதனை செய்துள்ளது.
இந்த சோதனையில் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் மற்றும் ஷிவிங்கி பீஜ் ஆகிய பொருட்கள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. முழுவதும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதாக சொல்லப்படும் பதஞ்சலி பொருட்களில் 31 சதவீதம் அந்நிய நாட்டு மூலப் பொருட்கள் கலந்து இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் மேற்கு வங்க சுகாதார ஆய்வு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் தரமற்றது என்று தெரிய வந்தததால் ராணுவ கேன்டீன்களில் இவற்றை விற்க தடை விதிக்கப்பட்டது. இந்த இரண்டு பொருட்கள் மட்டுமின்றி ஆயுர்வேத மருந்துகள் என்று விற்கப்படும் அவிபத்திரிக்கா சூரணம், லவன் பஷ்கர் சூரணம், யோக்ராஜ் குக்குளூ உள்ளிட்ட 18 பொருட்களும் தரமற்றவை என்று தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சில ஆண்டுகளாகவே ஆயுர்வேதப் பொருட்கள் தயாரிப்பு மையமாக ஹரித்வார் மாறி வருகிறது. ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து விற்பனை செய்வதற்காக ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீலர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் பகுதிகளில் அதிகரித்து விட்டனர். எனவே இனி தொடர் ஆய்வுகளை நடத்த உத்தரகாண்ட் மாநில ஆயுர்வேத அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
http://kaalaimalar.in/baba-ramdev-patanjali-rti-information/