கட்டிட தொழிலாளர் நலனுக்காக வசூல் செய்யப்பட்ட வரி ரூ. 20 ஆயிரம் கோடி எப்படி செலவு செய்தீர்கள், அதிகாரிகளுக்கு டீ பார்ட்டி வைத்தீர்களா?, அல்லது ஊர் சுற்ற செலவு செய்தீர்களா? என தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியை கேள்விகளால் ெவளுத்து வாங்கியது உச்ச நீதிமன்றம்.
கட்டுமான தொழிலாளர் நலன்
கட்டிட தொழிலாளர்கள் நலன் வரிச்சட்டம் 1996ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் இருந்து கூடுதல் வரி வசூல் செய்யப்பட்டு கட்டிட தொழிலாளர்கள் நல வாரியத்தில் சேர்க்கப்படும். அவ்வாறு கடந்த 20 ஆண்டுகளாக சேர்க்கப்பட்ட ரூ. 20 ஆயிரம் கோடி பணம் என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை.
பொது நல மனு
இந்த பணம் முறைப்படி பயன்படுத்தப்பட்டதா, இந்த பணத்தில் யாரெல்லாம் பயன்பெற்றார்கள், என்பது குறித்து அறிய உச்ச நீதிமன்றத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான தேசிய அளவிலான இயக்கம் என்ற தனியார் தொண்டுநிறுவனம் பொது நலமனு தாக்கல் செய்து இருந்தது.
திடுக்
இந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி பதில் மனுவும், பிரமானப்பத்திரமும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து, கடந்த வௌ்ளிக்கிழமை மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் தாக்கல் செய்த மனுவைப் பார்த்து உச்ச நீதிமன்றமே திடுக்கிட்டது. அந்த பதில் மனுவில், ரூ. 20 ஆயிரம் கோடி பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை எனத் தெரிவித்தது.
பதில் மனு
மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகத்தின் சட்ட ஆலோசகர் வாதிடுகையில், “ ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கூடுதல் வரி மாநிலங்களிடம் இருக்கிறது. அந்தபணத்தை கட்டுமான வாரியத்திடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது’’ என்றார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மகேந்திர சிங் வாதிடுகையில், “ ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரி தொடர்பான ஒட்டுமொத்த கணக்கும் மாநில அரசுகளிடம் இருக்கிறது. எவ்வளவு பணத்தை வரியாக வசூலித்தார்கள் என்பது அவர்களைக் கேட்டால் தெரியும்’’ என்றார்.
முறைப்படுத்த வேண்டும்
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோலின் கோன்சல்வேஸ் வாதிடுகையில் “ கட்டுமான தொழிலாளர்கள் வாரியத்திடம் இருக்கும் கணக்குகளை முறைப்படுத்தி, தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார்.
டீ பார்ட்டிக்கு செலவிட்டீர்ளா?
இதையடுத்து, நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா பிறப்பித்த உத்தரவில், “ கட்டுமான தொழிலாளர்களின் நலனுக்காக ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட வரிப்பணம் என்ன ஆனது எனத் தெரியவில்லை என தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது ரூ.20 ஆயிரம் கோடி என்ன ஆனது? எங்கே போனது. ஏதாவது டீபார்ட்டிக்கு செலவு செய்தீர்களா? அல்லது அதிகாரிகள் சுற்றுலா செல்ல செலவு செய்தீர்களா? அதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
கணக்கெடுங்கள்
முதலில் ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் கடந் 1996ம் ஆண்டில் இருந்து நடப்பு ஆண்டு மார்ச்31-ந்தேதி வரை கட்டுமான தொழிலாளர்கள் நலத்துக்காக ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் இருந்து பெற்ற வரிப்பணம் எவ்வளவு என்பதை கணக்கு எடுக்க கூறுங்கள்.
6 வாரங்கள்
அந்த பணத்தின் கணக்கு குறித்து தலைமை கணக்கு தணிக்கை அலுவலகத்துக்கு தெரிவிக்க கூறுங்கள். வசூலித்த பணத்தை அடுத்த 6 வாரங்களுக்குள் அந்த குறிப்பிட்ட வாரியத்துக்கு மாற்றி, அது குறித்த தகவலைக் கேட்டு வாங்கி, ஆகஸ்ட் 2-ந்தேதிக்குள் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் ’’ என உத்தரவிட்டனர்.
source: kaalaimalar