ஜெயங்கொண்டத்தில் பேருந்து டிக்கெட் விலையேற்றத்தை தட்டிக் கேட்ட பயணி, டிரைவர் மற்றும் நடத்துனரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஸ் கட்டண உயர்வுக்குப்பின் சாதாரண பஸ்கள் பெரும்பாலானவை பாயிண்ட் டு பாயிண்ட் பஸ்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதுகுறித்து, சம்மந்தப்பட்ட அரசு பஸ் கண்டக்டர்களிடம் காரணம் கேட்டால், பாயிண்ட் டு பாயிண்ட் அல்லது எக்ஸ்பிரஸ் பஸ் என்பதால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
எக்ஸ்பிரஸ் பஸ்கள் குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்ல வேண்டும்.
பெரும்பாலான அரசு எக்ஸ்பிரஸ் பஸ்கள், அனைத்து நிறுத்தத்திலும் நின்று செல்வதுடன், கட்டை மாட்டு வண்டியை போல் செல்கிறது என, பரவலான குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது கொலை சம்பவமே நடந்துள்ளது.
இது குறித்து உயிரிழந்த ராஜாவின் மனைவி பழனியம்மாள் கூறுகையில், ‘நேற்று இரவு உடையார்பாளையத்தில் இருந்து அரியலூர் பேருந்தில் டிக்கெட் வாங்க எனது கணவர் 30 ரூபாய் பணம் கொடுத்தார்.
இது பிபி சென்னை வண்டி ஒரு டிக்கெட் 30 ரூபாய் என நடத்துனர் கூறியவுடன் எனது கணவர் 60 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினார்.
ஆனால், எல்லா நிறுத்தங்களிலும் ஆட்களை ஏற்றுவதை கண்ட என் கணவர் சதாரண வண்டியில மக்களை ஏத்திகிட்டு, பொய் சொல்லி மக்களோட காச புடுங்குறீங்களேனு கேட்டார்.
இதில் வாக்குவாதம் முற்றி எனது கணவரை டிரைவரும், கண்டக்டரும் கீழே தள்ளி மிதித்தார்கள்.
இதையடுத்து போலீஸ் ஸ்டேஷனில் பேருந்தை நிறுத்திவிட்டு இவன் தண்ணிய போட்டு பிரச்னை செய்கிறான். இவரால் பல பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது என போலீஸிடம் எங்களை ஒப்படைத்துவிட்டு சென்றார்கள்.
காவல் நிலையத்தில் உட்கார்ந்திருக்கும் போதே நெஞ்சு வலி காரணமாக எனது கணவர் தண்ணீர் கேட்டார்.
கொஞ்ச நேரம் கழித்து நான் தண்ணீர் எடுத்து வந்து கொடுப்பதற்குள் எனது கணவர் உயிர் போய்விட்டது’, என்று வயிற்றில் அடித்துகொண்டு அழத்தொடங்கினார்.
இதுகுறித்து எஸ்.ஐ.கமலஹாசனிடம் பேசுகையில், ‘அப்போது நான் ஸ்டேஷனில் இல்லை. இறந்தவர் பாடியை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.
இப்போது டிரைவர் முருகேசன், நடத்துனர் குமார் இருவரையும் கைது செய்துள்ளோம். இன்னும் விசாரணை முடியவில்லை’, என்கிறார்.