வெள்ளி, 26 மே, 2017

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியின் கோரிக்கையை ஏற்க மறுப்பு! May 25, 2017

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியின் கோரிக்கையை ஏற்க மறுப்பு!


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான புகார் குறித்து, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெற்று வருகிறது. 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், அத்வானி உள்ளிட்டோர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரிடமும் மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து 2 வருடங்களுக்குள் தீர்ப்பினை அளிக்க வேண்டும் என்றும், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்றம், கடந்த ஏப்ரல் 19ம் தேதி உத்தரவிட்டது. 

இதையடுத்து, இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அத்வானி உள்ளிட்டோருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நேரில் ஆஜராவில் இருந்து விலக்கு அளிக்க கோரி, அத்வானி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதை ஏற்க மறுத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் வரும் 30-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Related Posts: