ஞாயிறு, 2 ஜூலை, 2017

3 லட்சம் நிறுவனங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன: பிரதமர் மோடி July 02, 2017

பண மதிப்பிழப்புக்குப்பின், சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட சுமார் 3 லட்சம் நிறுவனங்கள், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

68வது பட்டய கணக்காளர்கள் தின விழா, டெல்லியில் நேற்று நடைபெற்றது. ஜிஎஸ்டியை அமல்படுத்திய வேளையில், இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். 

பிரதமரின் கையெழுத்தை விட, பட்டய கணக்காளரின் கையெழுத்து வலிமை மிக்கது என பிரதமர் மோடி அப்போது குறிப்பிட்டார். மத்திய அரசின் அதிரடி  நடவடிக்கைகளால், சுவிஸ் வங்கிகளில் கருப்புப்பணம் பதுக்கி வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து விட்டதாக குறிப்பிட்ட அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பின், சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட சுமார் 3 லட்சம் நிறுவனங்கள், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

கடந்த 48 மணி நேரத்தில், 1 லட்சம் நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், எஞ்சிய 2 லட்சம் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் தெரிவித்தார். வரி ஏய்ப்பு மூலம் மக்களிடமிருந்து கொள்ளையடித்தவர்கள், மீண்டும் மக்களிடம் திருப்பிச் செலுத்தும் நேரமிது என்றும் பிரதமர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.