
காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், திமுக, திரிணாமூல் உட்பட 18 எதிர்க்கட்சிகள் சேர்ந்து மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியை துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்திருக்கின்றன. அதிகாரப்பூர்வமாக இன்னமும் இது குறித்து அறிவிக்கப்படாத நிலையில், இது குறித்து பேட்டியளித்துள்ள கோபாலகிருஷ்ண காந்தி, “ நான் என்னை அரசியல்வாதியாக கருதவில்லை. குடிமக்களின் வேட்பளராகவே கருதுகிறேன். மிக முக்கியமான காலகட்டத்தில் இந்தியாவின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. என்னை வேட்பாளராக தேர்ந்தெடுக்க பரிசீலித்த 18 கட்சிகளுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கோபாலகிருஷ்ண காந்தி முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி. 1968 முதல் 1985 வரை தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றினார். அதன்பிறகு ,1987-1992 வரை துணைக் குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத்தலைவருக்கு முறையே செயலர் மற்றும் இணை செயலராக பணி ஆற்றியுள்ளார். பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதராக ஆணையராக பணியாற்றிய கோபாலகிருஷ்ணன், 2004-09 வரை மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றியுள்ளார். தற்போது, ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசியராக உள்ளார்.