ஞாயிறு, 23 ஜனவரி, 2022

8 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா…30,000-ஐ தாண்டிய தினசரி பாதிப்பு

 23 1 2022 தமிழ்நாட்டில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 744 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடைசியாக இரண்டாவது அலையின் போது 2021 மே 21 அன்று 30 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியிருந்தது. அப்போது, 36 ஆயிரத்து 184 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சனிக்கிழமை புள்ளிவிவரங்கள்படி, ஒரே நாளில் 23 ஆயிரத்து 372 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.33 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்து 3 ஆயிரத்து 410ஆக உள்ளது. அதில், 28 லட்சத்து 71 ஆயிரத்து 525 பேர் குணமடைந்துள்ளனர். 37 ஆயிரத்து 178 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் தொடர்ந்து ஆறாவது நாளாக கொரோனா பாதிப்பு குறைவாக பதிவாகியுள்ளது. மாறாக மற்ற மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சென்னையில் 6,452 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, கோவையில் 3,886 பேருக்கும், செங்கல்பட்டில் 2,377 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ஆறு மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது சனிக்கிழமையன்று எட்டு மாவட்டங்களில் 1,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கன்னியாகுமரி (1,266), சேலம் (1,080), திருவள்ளூர் (1,069), ஈரோடு (1,066), திருப்பூர் (1,014) ஆகிய மாவட்டங்களில் 1,000க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

38 மாவட்டங்களில் 30 மாவட்டங்களில் முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது பாதிப்புகள் அதிகரித்துள்ளன. கள்ளக்குறிச்சி, தென்காசி, நாமக்கல், தஞ்சாவூர், தேனி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதை காண முடிகிறது.

ஆனால், சென்னை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.

மேலும், 18 மாவட்டங்களில் சனிக்கிழமை இறப்புகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் பதிவான 33 இறப்புகளில் 12 பேர் சென்னை ஆகும். தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா இருவர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத் துறை தகவலின்படி, இறந்த 33 பேரில் 27 பேர் 60 வயதை கடந்தவர்கள் ஆவர். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 54 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 20.8 சதவீதமாக உள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-corona-case-crossed-30-thousand-8-districts-cases-increased-400847/