21 1 2022 இந்து அறநிலையத்துறை ஆலோசனைக் குழு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்து உரிமைகள் மற்றும் நன்கொடைகள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது உட்பட்ட பல்வேறு விவகாரங்கள் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்து அறநிலையத்துறை தற்போது இந்த சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குழு உறுப்பினர்கள் மத்தியில் பேசிய முதல்வர் 2015ம் ஆண்டு முதல் அறநிலையத்துறை ஆலோசனைக் குழு அமைக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன் குழு அமைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
று தெரிவித்தார்.
ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு முக்கிய பொறுப்புகளை முதல்வர் வழங்கினார். ஸ்தலபுராணங்கள், அரிய புத்தகங்களை வெளியிடுதல், அதனை டிஜிட்டல் முறைப்படுத்துதல் மற்றும் புத்தகங்களை பக்தர்களுக்கு விற்றல் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று தமிழ் அறிஞர், பேச்சாளர் சுகி சிவம் சமய சொற்பொழிவு மற்றும் ஆன்மீக வகுப்புகளை நடத்தும் பணிகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக பரிசீலனை செய்வதாக கூறிய முதல்வர், குழு உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களின் கருத்துகளை தனிப்பட்ட முறையில் நேரில் வந்து கூறலாம் என்றும் கூறினார். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வகையான சௌகரியங்களும் செய்து தரப்படும் என்றும் அறிவித்தார்.
கோவில்கள் நிதி நிலைமையை மேம்படுத்துதல், அறநிலையத்துறையின் ஸ்தலபுராணங்களை ஆவணப்படுத்துதல், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுதல், விற்பனை மற்றும் பக்தர்களுக்காக காட்சிப்படுத்துதல், அரிய புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் ஆகியவற்றை மறுபிரசுரம் செய்தல், பாடத்திட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்துதல் போன்ற விவகாரங்களும் நேற்றைய சந்திப்பில் பேசப்பட்டது.
வரலாற்று கோவில்களை கட்ட உறுதுணையாக இருந்த ஆகமங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தல், இளைய தலைமுறையினருக்கு தர்ம விழுமியங்களை எடுத்துச் செல்ல சமய விவாதங்கள் மற்றும் ஆன்மிக வகுப்புகளை நடத்துவதற்கான வரைவு திட்டத்தை தயாரித்தல், சேவைகளை முழுமையாக கணினிமயமாக்குதல், 10 லட்சத்துக்கும் அதிகமான ஆண்டு வருமானம் உள்ள கோயில்களுக்கு பரம்பரை அல்லாத அறங்காவலர்களை நியமிப்பதற்கான ஆலோசனைக் குழுவிலிருந்து மாநில அளவிலான குழுவுக்கு மூன்று உறுப்பினர்களைத் தேர்வு செய்தல் ஆகிய பிற விவகாரங்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-cm-mk-stalin-led-panel-mulls-tweaking-hr-and-ce-act-400010/