ஞாயிறு, 30 ஜனவரி, 2022

சிறார் தடுப்பூசி அப்டேட்: திடீரென குறைந்த வேகம்; என்ன காரணம்?

 

சிறார் தடுப்பூசி அப்டேட்: திடீரென குறைந்த வேகம்; என்ன காரணம்?

30 1 2022 இந்தியாவில் 15-18 வயதிற்குட்பட்ட மக்கள்தொகையில் 60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், இந்த குழுவில் திடீரென தடுப்பூசியின் வேகம் குறைந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.

கடந்த வாரத்தில், இந்த வயது பிரிவினரில் சராசரியாக 6.25 லட்சம் பேர் தினமும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால், இம்மாத தொடக்கத்தில் இந்த வயதினரிடையே தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய சமயத்தில், சராசரியாக 40 லட்சத்துக்கும் அதிகமானோர் தினந்தோறும் தடுப்பூசி செலுத்தி வந்தனர்.

தற்போது வரை, இந்த பிரிவினரில் 4.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த வயது பிரிவினரில் மொத்தம் 8 கோடி பேர் உள்ளனர்.

தடுப்பூசியின் வேகம் குறைந்திருப்பது எதிர்பாராதது அல்ல. வயது வந்தோருக்கு தடுப்பூசி செலுத்தும் போதும், இதே போல் அதன் வேகம் ஒரு கட்டத்தில் குறைந்தது. பொதுவாகவே, தடுப்பூசி பாதி நிலையை அடைந்தவுடன் அதன் வேகம் குறைகிறது. எவ்வாறாயினும், வயது வந்தோரை காட்டிலும் இந்த பிரிவினரிடையே தடுப்பூசி வீழ்ச்சி அதிகளவில் உள்ளது.

கொரோனா தடுப்பூசியின் திடீர் வீழ்ச்சிக்கு அவசரமின்மை ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், ஒமிக்ரான் வகை கொரோனாவின் தாக்கம் குறிப்பாக இளம் வயதினரிடையே லேசான பாதிப்பை தான் ஏற்படுத்துகிறது. அதேபோல், தடுப்பூசிகள் ஒமிக்ரான் நோய்த்தொற்றை தடுப்பதிலும் சிறப்பாக பயனளிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மாறாக, மிகவும் பாதிக்கப்படக்கூடிய வயதுக் குழுக்களில், தடுப்பூசிகளுக்கான தேவை ஒப்பீட்டளவில் நிலையானதாக உள்ளது.

தினந்தோறும் சராசரியாக 5 முதல் 6 லட்சம் பேர் முன் எச்சரிக்கை டோஸ் செலுத்திக்கொள்கின்றனர். இதில் ஆரம்பம் முதலே பெரிய மாற்றமில்லை. இம்மாத தொடக்கத்தில், முன்களப் பணியாளர்களுக்கும், சுகாதாரத் துறையினருக்கு, 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் நபர்களுக்கு முன் எச்சரிக்கை டோஸ் செலுத்தும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மக்கள்தொகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 கோடி பேர் உள்ளனர். தற்போது வரை, அதில் 70 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். அதில், அனைவரும் தற்போது பூஸ்டர் டோஸூக்கு தகுதியுடையவர்கள் கிடையாது.

இரண்டு டோஸ் எடுத்து 9 மாதங்கள் ஆனவர்கள் அல்லது இணைநோய் இருப்பவர்களுக்கு மட்டுமே முன் எச்சரிக்கை டோஸ் செலுத்தப்படுகிறது.

வெள்ளிக்கிழமை தரவுபடி, இந்தியாவில் 165 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது உலக அளவில் 16 சதவீதம் ஆகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் முன்முயற்சியான Our World in Data திட்டத்தின் படி, இதுவரை 10 பில்லியனுக்கும் அதிகமான அளவு கோவிட்-19 தடுப்பூசிகள் உலகம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளன.

உலக மக்கள்தொகையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் கோவிட்-19 தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸைப் பெற்றுள்ளனர். ஆனால் இந்தியாவுடன் ஒப்பிடக்கூடிய ஒருங்கிணைந்த மக்கள்தொகையுடன் 54 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்காவில், இதுவரை சுமார் 350 மில்லியன் டோஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இது ஒவ்வொரு நான்கு நபர்களுக்கும் ஒரு டோஸ் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் ஏழ்மையான நாடுகள் சேர்ந்து இதுவரை 100 மில்லியனுக்கும் குறைவான டோஸ் தான் கொடுக்க முடிந்துள்ளன.

ஆனால், இஸ்ரேல் போன்ற சில நாடுகள் தங்கள் மக்களுக்கு 4ஆவது டோஸ் செலுத்தி வருகின்றன. சீனா தனது மக்களுக்கு கிட்டத்தட்ட 3 பில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. ஐரோப்பாவில் சுமார் 1.2 பில்லியன் டோஸ்களும், அமெரிக்காவில் 540 மில்லியன் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது..

கோவிட்-19 தடுப்பூசிகள் அனைவருக்கும் மலிவாகவும், சமமான அணுகலை உறுதி செய்வதற்காகவும் உலக சுகாதார அமைப்பு மற்றும் சில சர்வதேச குழுக்களின் கூட்டு முயற்சியான கோவாக்ஸ் மூலம் இதுவரை 1 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

source https://tamil.indianexpress.com/explained/pace-of-jabbing-slowing-in-india-15-18-age-group-403928/