செவ்வாய், 18 ஜனவரி, 2022

குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு

 17 1 2022 ஆண்டுதோறும் ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்படும். இதில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் கொடியேற்றுவார். கொடியேற்றத்திற்கு பிறகு முப்படைகளின் அணிவகுப்பு, ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநிலங்களின் சிறப்புகளை தெரிவிக்கும் வகையில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த ஆண்டு, இந்த அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இடம் பெற்றால்தான் அனுமதிப்போம் என கூறி தமிழக அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், சு.வெங்கடேசன் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தின் வீரமங்கை வேலுநாச்சியாரும், சுதேசித் தலைவன் வ.உ.சி-யும், மக்கள் கேரளத்தின் நாராயண குருவையும் நிராகரிக்க நீங்கள் யார் ? குடியரசுதின விழாவில் இதையெல்லாம் விடுத்து விட்டு வேறெதை அனுமதிப்பீர்! கோட்சோக்களையும் – கோல்வார்க்கர்களையுமா? #RepublicDay என பதிவிட்டுள்ளார்.

கரூர் தொகுதி எம்.பியான ஜோதிமணி தனது கண்டன பதிவில், ஒன்றிய மோடி அரசு நமது தமிழ்நாட்டை,வீரவரலாற்றை தொடர்ந்து அவமத்தித்து வருகிறது. வ.உ.சி,வேலுநாச்சியார்,பாரதி ஆகியோர் சுதந்திரப்போராட்ட நெருப்பில் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த மாவீரர்கள்,மகத்தான தியாகிகள். அத்தியாகிகளையும்,,தமிழ்நாட்டையும் அவமதிப்பதை மானமுள்ள தமிழினம் ஏற்காது.

சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த காலத்தில் ,ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்து மன்னிப்புக்கடிதம் எழுதிய துரோக வரலாறு ஆர்.எஸ்.எஸ் உடையது. அந்த சித்தாந்தத்தால் வழிநடத்தப்படும் மோடி அரசிற்கு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் அருமையும்,வரலாறும் எப்படிப் புரியும்?

குறிப்பாக நமது தமிழ்நாட்டையும் ,நமது வரலாறு, மொழி, கலாச்சாரம், தொழில்கள் அனைத்தையும் குறிவைத்து ,மோசமான தாக்குதலை மோடி அரசு நடத்திவருகிறது. இந்த தாக்குதலில் இருந்து நமது தமிழ்நாட்டையும்,தமிழினத்தையும் காக்கவேண்டிய பொறுப்பும், கடமையும் நமது ஒவ்வொருவருக்கும் உள்ளது.

தமிழினத்திற்கு எதிரான பாஜக,ஆர் எஸ் எஸ் தாக்குதலை அச்சமற்று எதிர்கொள்வோம். தமிழக மண் ஈடு இணையற்ற வீரமும், சுயமரியாதையும் மிகுந்தது என நிரூபிப்போம். நமது தொன்மையான வரலாற்றைப் பாதுகாப்போம். என்று பதிவிட்டுள்ளார்.