Oxfam report: In 2021, income of 84% households fell, but number of billionaires grew: நாட்டில் உள்ள 84 சதவீத குடும்பங்களின் வருமானம் 2021ல் குறைந்துள்ளது, ஆனால் அதே நேரத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 102ல் இருந்து 142 ஆக உயர்ந்துள்ளது என்று ஆக்ஸ்பாம் அறிக்கை கூறியுள்ளது, இது கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட மோசமான வருமானப் பிளவைச் சுட்டிக்காட்டுகிறது.
உலகப் பொருளாதார மன்றத்தின் டாவோஸ் நிகழ்ச்சி நிரலுக்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஆக்ஸ்பாம் அறிக்கையான “சமத்துவமின்மை கொலை”, கொரோனா தொற்றுநோய் இந்தியாவை தொடர்ந்து அழித்து வருவதால், நாட்டின் சுகாதார பட்ஜெட் 2020-21ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளிலிருந்து (RE) 10% சரிந்துள்ளதாக கண்டறிந்துள்ளது. மேலும், கல்விக்கான ஒதுக்கீட்டில் 6% குறைக்கப்பட்டது, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மொத்த யூனியன் பட்ஜெட்டில் 1.5%லிருந்து 0.6% ஆகக் குறைந்துள்ளது என்றும் ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுகிறது.
2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் 100 பணக்காரர்களின் கூட்டுச் செல்வம் 57.3 லட்சம் கோடி ரூபாயை (775 பில்லியன் டாலர்கள்) எட்டியதாக ஆக்ஸ்பாம் உலக அறிக்கையின் இந்திய துணைப் பிரிவு கூறுகிறது. அதே ஆண்டில், தேசியச் செல்வத்தில் கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீத மக்களின் பங்கு வெறும் 6 சதவீதமாக இருந்ததாக அறிக்கை குறிப்பிடுகிறது.
தொற்றுநோய் காலத்தில் (மார்ச் 2020 முதல் நவம்பர் 30, 2021 வரை), இந்திய பில்லியனர்களின் சொத்து மதிப்பு ரூ.23.14 லட்சம் கோடியிலிருந்து (313 பில்லியன் டாலர்கள்) ரூ.53.16 லட்சம் கோடியாக (719 பில்லியன் டாலர்கள்) அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. அதேநேரம், 4.6 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள், 2020 ஆம் ஆண்டில் தீவிர வறுமையில் வீழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஐக்கிய நாடுகள் சபையின் படி, உலக புதிய ஏழைகளில் கிட்டத்தட்ட பாதி பேர் ஆகும்.
சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலகின் மூன்றாவது அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. மேலும், பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்தை விட அதிகமான பில்லியனர்களை இந்தியா கொண்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. 2021 இல் இந்தியாவில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கையில் 39 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
“இந்தியாவின் வேலையின்மை விகிதம் நகர்ப்புறங்களில் 15 சதவீதமாக இருந்தபோதும், சுகாதார அமைப்பு சரிவின் விளிம்பில் இருந்தபோதும் பில்லியனர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது” என்று அறிக்கை கூறுகிறது.
அதானி போன்ற பணக்காரர்களான 100 குடும்பங்களின் செல்வத்தில் ஐந்தில் ஒரு பங்கு அதிகரிப்பு என்பது ஒரு தனி நபர் மற்றும் வணிக நிறுவனங்களின் செல்வத்தின் அதிகரிப்பால் கணக்கிடப்பட்டதாக ஆக்ஸ்பாம் சுட்டிக்காட்டியுள்ளது.
“உலக அளவில் 24வது இடத்திலும், இந்தியாவில் இரண்டாவது இடத்திலும் உள்ள கௌதம் அதானி, ஒரு வருட காலத்தில் தனது நிகர மதிப்பு எட்டு மடங்கு பெருகுவதைக் கண்டுள்ளார்; அவரது சொத்து மதிப்பு 2020 இல் 8.9 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2021 இல் 50.5 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஃபோர்ப்ஸின் நிகழ் நேரத் தரவுகளின்படி, நவம்பர் 24, 2021 நிலவரப்படி, அதானியின் நிகர மதிப்பு 82.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்தியாவின் கொடிய இரண்டாவது அலையின் போது, எட்டு மாத கால இடைவெளியில் அதானியின் இந்த அபரிமிதமான வளர்ச்சியில், ஆஸ்திரேலியாவில் அதானி புதிதாக வாங்கிய கார்மைக்கேல் சுரங்கங்கள் மற்றும் மும்பை விமான நிலையத்தில் வாங்கிய 74 சதவீத பங்குகளின் வருமானமும் அடங்கும். அதே நேரத்தில், முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு, 2020ல் 36.8 பில்லியன் டாலரில் இருந்து 2021ல் 85.5 பில்லியன் டாலராக இருமடங்காக உயர்ந்துள்ளது,” என அறிக்கை கூறுகிறது.
ஆக்ஸ்பாம் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் பெஹார், “ஒவ்வொரு நாளும் குறைந்தது 21,000 பேர் அல்லது ஒவ்வொரு நான்கு வினாடிகளுக்கு ஒரு நபரின் மரணத்திற்கும் பங்களிக்கும் சமத்துவமின்மையின் அப்பட்டமான யதார்த்தத்தை” உலகளாவிய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது என்றார்.
“தொற்றுநோய் பாலின சமத்துவத்தை 99 ஆண்டுகளில் இருந்து இப்போது 135 ஆண்டுகள் வரை பின்னோக்கி அமைத்துள்ளது. 2020ல் பெண்கள் மொத்தமாக ரூ. 59.11 லட்சம் கோடி (USD 800 பில்லியன்) வருவாயை இழந்துள்ளனர், வேலையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை 2019 ஐ விட இப்போது 1.3 கோடி குறைந்துள்ளது. வரிவிதிப்பு மூலம் அதிக சொத்து உள்ளவர்களை குறிவைத்து, இந்த வெறுப்பூட்டும் சமத்துவமின்மையின் தவறுகளை சரிசெய்வதைத் தொடங்குவது அவ்வளவு முக்கியமானதாக இருந்ததில்லை. உயிர்களைக் காப்பாற்றுவதற்காக அந்தப் பணத்தை உண்மையான பொருளாதாரத்திற்குத் திரும்பப் பெறுங்கள்,” என்று பெஹர் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசின் வருவாயில் ஒரு பங்காக மறைமுக வரிகள் அதிகரித்துள்ளதையும், அதே நேரத்தில் கார்ப்பரேட் வரி விகிதம் குறைந்து வருவதையும் ஆக்ஸ்பாம் இந்தியா அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2020-21 முதல் ஆறு மாதங்களில் எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி கடந்த ஆண்டை விட 33 சதவீதம் உயர்ந்துள்ளது, இது கொரோனாவுக்கு முந்தைய அளவை விட 79 சதவீதம் அதிகம். அதே நேரத்தில், “பெரும் பணக்காரர்களுக்கான” சொத்து வரி 2016 இல் ரத்து செய்யப்பட்டது என்று அறிக்கை கூறுகிறது.
கடந்த ஆண்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக கார்ப்பரேட் வரிகளை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாகக் குறைத்ததால் ரூ. 1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது, இது இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்புக்கு பங்களித்தது என்று அறிக்கை கூறுகிறது. மேலும், “இந்த போக்குகள் ஏழைகள், விளிம்புநிலை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிக வரிகளை செலுத்தினர், அதே நேரத்தில் பணக்காரர்கள் தங்கள் நியாயமான பங்கை செலுத்தாமல் அதிக பணம் சம்பாதித்தனர் என்றும் அறிக்கை கூறுகிறது.
தேசிய மாதிரி ஆய்வின் (NSS) (2017-18) தரவுகள், தனியார் மருத்துவமனைகளில் உள்ள அவுட்-ஆஃப்-பாக்கெட் செலவினம் (OOPE) உள்நோயாளிகளுக்கான பொது மருத்துவமனைகளில் உள்ளதை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகமாகவும், வெளிநோயாளிகளுக்கான பராமரிப்புக்கு இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாகவும் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்தியாவில் சராசரி OOPE 62.67 சதவீதமாகவும், உலக சராசரி 18.12 சதவீதமாகவும் உள்ளது.
மேலும், நாட்டில் கூட்டாட்சி அமைப்பு இருந்தபோதிலும், வருவாய் தரும் கட்டமைப்பு வளங்களின் கட்டுப்பாட்டை மத்திய அரசு தன் கைகளில் வைத்திருக்கிறது, ஆனால் தொற்றுநோயை நிர்வகிப்பது மாநிலங்களுக்கு விடப்பட்டது. மாநிலங்கள் அதன் நிதி அல்லது மனித வளங்களைக் கொண்டு அதை கையாள முடியாமல் திண்றுகின்றன என்றும் அறிக்கை கூறுகிறது.
source https://tamil.indianexpress.com/india/oxfam-report-2021-income-households-fell-398385/