திங்கள், 31 ஜனவரி, 2022

கிரிமினல் வழக்கு இருந்தால் கவுன்சிலர் சீட் இல்லை: ஸ்டாலின் கறார் உத்தரவு

 31 1 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட எந்தக் கட்சியினருக்கும், கிரிமினல் குற்றச்சாட்டு பின்னனி உள்ள பெண்கள் உள்ளிட்ட கட்சியினர் யாருக்கும் சீட்டு வழங்கப்பட மாட்டாது என்றும், அதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜனவரி 30) கட்சித் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய ஒரு திறந்த கடிதத்தில், கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் கழகத்தினரின் அணுகுமுறை அவசியம் அமையவேண்டும் என்பதும் வெறும் தேர்தல் கூட்டணியாக இல்லாமல், கொள்கைக் கூட்டணியாக உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தூய தோழமை தொடர்ந்திட வேண்டும் என்பதும் உங்களில் ஒருவனான என் வேண்டுகோளாகும்.

கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்தபிறகு, தி.மு.க போட்டியிட உள்ள இடங்களுக்கான வேட்பாளர்கள் தேர்வு என்பது, ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வது போன்ற நெறிமுறைகளுடன் கண்டிப்பானதாகவும் கட்டுக்கோப்பானதாகவும் இருக்க வேண்டும். சுயநலம் தவிர்த்து, பொதுநலச் சிந்தனையும் கொள்கைப் பற்றும் கொண்டு, இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தன்னை முழுமையாகவும் முழுநேரமும் அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு வேட்பாளர் தேர்வுகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். குற்றப் பின்னணி ஏதேனும் இருந்தால், அவை தொடர்பான வழக்குகளில் தன்னை நிரபராதி என்று சட்டப்பூர்வமாக நிரூபிக்கும் வரையில் அவர்களை வேட்பாளராகத் தேர்வு செய்திடல் நிச்சயமாகக் கூடாது என்பதை திமுக நிர்வாகிகள் தவறாமல் மனதில் கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.

மேலும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியதாக கூறிய ஸ்டாலின், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது, இடங்களைப் பகிர்வது, வாக்கு கேட்பது போன்றவற்றை ஒருங்கிணைத்து, வெற்றியை ஒரே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். திமுக அரசின் அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கும் கூட்டணி தலைவர்கள் ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். “நமது கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணியாக இருக்கக் கூடாது; அது மதச்சார்பற்ற கூட்டணியாக இருக்க வேண்டும், இது கொள்கை மற்றும் வளர்ச்சி சார்ந்ததாக இருக்க வேண்டும்,” என்று முதல்வர் கூறினார்.

“உள்ளாட்சி நிர்வாகம்தான் நல்ல ஜனநாயகத்தின் அடிப்படை. அவைதான் அரசின் திட்டங்கள் இறுதிவரை மக்களை சென்றடைய வழி வகுக்கும். மக்கள் தங்கள் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். உள்ளாட்சி அமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்பதை எப்போதும் உறுதி செய்யும் இயக்கம் திமுக. எனவே, மாநிலம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடவும், நல்லாட்சியை உறுதிப்படுத்தவும் தொண்டர்களிடம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “பாஜகவின் சீரழிவு அரசியலை” அம்பலப்படுத்துமாறும், “மத வெறுப்பை விதைக்கும்” அதன் முயற்சிகளை தமிழ் நாட்டில் நல்லிணக்கத்துடன் வாழும் மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். மேலும், “மக்கள் நலனுக்கு எதிரான இரு கட்சிகளையும் அம்பலப்படுத்துங்கள், மேலும் மதச்சார்பற்ற சக்தியை மாநிலத்தில் காலூன்ற அனுமதிக்காது என்று அவர்களிடம் சொல்லுங்கள்,” என்றும் ஸ்டாலின் கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-assures-no-seat-for-cadres-with-criminal-cases-404238/