தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பு மாணவி சிலநாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி சிறுமி இறந்த, மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெ.குருமூர்த்தி தலைமையில் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் என அனைத்து மதத்தைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மத நல்லிணக்கத்தை பேணி வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பிட்ட பள்ளியில் 60 சதவீதத்துக்கும் அதிகமான இந்து மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், அவர்களில் பலர் பள்ளி நடத்தும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
“இதுவரை, நாங்கள் எந்த மத மாற்றம் அல்லது மதமாற்றத்திற்கான பிரச்சாரம் போன்ற சம்பவத்தை சந்திக்கவில்லை. ஆனால், சமீபத்தில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதை, ஒரு சில அமைப்புகள் வேண்டுமென்றே திரிபுபடுத்தி அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டன”.
எங்கள் கிராமத்திற்கு தினசரி பல புதியவர்கள் வருகின்றனர். பள்ளியில் கட்டாய மதமாற்றம் குறித்து பேசுமாறு கிராமத்தினரை வற்புறுத்துகின்றனர்.
எனவே கிராமத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். “எங்கள் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென கிராமத்தினர் ஆட்சியரை அறிவுறுத்தினர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/some-parties-conspire-to-provoke-communal-strife-michaelpatti-villagers-in-fear-403570/