19 1 2022 மத்திய அரசின் புதிய கோவிட் வழிகாட்டுதல்கள், 2-3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால், காசநோய் மற்றும் பிற நோய்களுக்கான பரிசோதனையை பரிந்துரைக்கிறது.
கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஸ்டீராய்டு மருந்துகளை பரிந்துரைப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கடுமையான இருமல் தொடர்ந்தால் அவர்களுக்கு காசநோய்க்கான பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் அதன் புதிய வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகத்தால் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வயதுவந்த கோவிட்-19 நோயாளிகளை நிர்வகிப்பதற்கான திருத்தப்பட்ட மருத்துவ வழிகாட்டுதல்களின்படி, ஸ்டீராய்டுகளின் பயன்பாடு கருப்பு பூஞ்சை போன்ற இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது, எனவே ஸ்டீராய்டுகள் அளிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால், காசநோய் மற்றும் பிற நோய்களுக்கான பரிசோதனையை புதிய வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.
புதிய வழிகாட்டுதல்கள் மருத்துவ சிகிச்சையின் ஆரம்ப கட்டங்களில் ஸ்டீராய்டுகளின் பயன்பாட்டிற்கு எதிரான எச்சரிக்கை குறித்து கூறியிருப்பதாவது: “எதிர்ப்பு அழற்சி அல்லது இம்யூனோமோடூலேட்டரி சிகிச்சை (ஸ்டீராய்டுகள் போன்றவை) ஆரம்பத்திலேயே அதிக டோஸ் அல்லது தேவையான அளவைவிட அதிகம் பயன்படுத்தப்படும் போது, மியூகோர்மைகோசிஸ் போன்ற இரண்டாம் நிலை கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று அபாயத்தை ஏற்படுத்தும்” என்று எச்சரிக்கை செய்துள்ளது.
மருத்துவ ஆக்சிஜன் சுவாச உதவி தேவைப்படாத நோயாளிகளுக்கு போடக்கூடிய ஸ்டீராய்டு ஊசிகளின் நன்மைகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று சுகாதார அமைச்சகத்தின் கோவிட் தேசிய பணிக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
லேசான உள்ள நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டாலும், கடுமையான நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோவிட் தேசிய பணிக்குழு விதிகளை வகுத்துள்ளது. இதனிடையே, மிதமான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் கோவிட் வார்டில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது.
ஆக்ஸிஜன் அளவு, சுவாச விகிதங்களின் அடிப்படையில், லேசான தொற்று, மிதமான தொற்று, கடுமையான தொற்றுநோய் வகைகளின் கீழ் யார் வருவார்கள் என்பதையும் இந்த புதிய வழிகாட்டுதல்கள் வரையறுக்கின்றன.
இந்த வார தொடக்கத்தில், சுகாதாரத்துக்கான நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால், ஸ்டீராய்டுகள் உட்பட கோவிட் மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக எச்சரித்தார்.
“நாம் கொடுக்கும் எந்த மருந்துகளும் பகுத்தறிவுடன் பயன்படுத்தப்பட வேண்டும். அதிகப்படியான பயன்பாடு இருக்கக்கூடாது என்பதில் அக்கறை இருக்க வேண்டும். கடந்த முறை, மியூகோர்மைகோசிஸுக்கு மருத்துவத்தின் பங்களிப்பு மிகப் பெரிய அளவில் காரணமாக இருந்தபோது நாம் மிகவும் பயங்கரமான சூழ்நிலையை கண்டோம்” என்று அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/covid-clinical-care-new-guidelines-avoid-steroids-test-for-tb-if-continue-cough-399014/