அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று கனிமொழியைப் புகழ்ந்து பேசிய நிலையில், அவர் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பதவியில் இருந்து விலக்கப்படுவதாக ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அதிரடியாக கூட்டாக அறிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக எம்.பி டி.கே.எஸ். இளங்கோவன் இல்லத் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உள்ளிட்ட திமுக தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இவர்களுடன், திமுகவின் பரம எதிர்க்கட்சியாக இருந்து வரும் அதிமுகவைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி நவநீதகிருஷ்ணன் கலந்துண்டார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், நாடாளுமன்றத்தில் தனக்கு நாடாளுமன்ற நடைமுறைகளைக் கற்றுக்கொடுத்தவர் கனிமொழிதான் என்று கூறி புகழாரம் சூட்டினார்.
அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு அதிமுக எம்.பி கலந்துகொண்டு திமுக எம்.பி.யும் கருணாநிதியின் மகளுமான கனிமொழியை புகழ்ந்து பேசியது தமிழக அரசியலில் அரிய நிகழ்வாக கவனம் பெற்றது. மேலும், மேடையில், முதலமைச்சர் ஸ்டாலின், ஆர்.எஸ். பாரதி ஆகியோருடன் அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணனும் அமர்ந்திருந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்நிலையில், நவநீதகிருஷ்ணன் எம்.பி அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அதிமுக வழகறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் எம்.பி (தென் சென்னை தெற்கு கிழக்கு) இன்று முதல் அப்பொறுபில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.” என்று கூறுகிறார்.
அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கம் சென்று அங்கே நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக எம்.பி கனிமொழியை புகழ்ந்து பேசிய செய்தி வெளியான நிலையில், அவருடைய கட்சி பறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் மூத்த தலைவர் ஜெயக்குமாரிடம், அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் திமுக எம்.பி கனிமொழியை புகழ்ந்து பேசியதால்தான், அவருடைய கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டது. இது அரசியல் நாகரிகமா என்ற கேள்விக்கு பதிலளித்தார். அறிவாலயத்துக்குள்ளே போய்விட்டு, அங்கே திமுக எம்.பி.யை பாராட்டி பேசுவது எல்லாம் கட்சியைக் கலங்கப்படுத்தும் விஷயமாகப் பார்க்கிறேன். இதை எப்படி அனுமதிக்க முடியும். எனவேதான், உரிய நடவடிக்கை, உரிய நேரத்தில் அவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது போல யாராக இருந்தாலும், கட்சியில் இருந்து இருந்துகொண்டு கட்சியைக் கலங்கப்படுத்தும் வேலை செய்தால் நிச்சயமாக இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-mp-navaneethakrishnan-relieved-from-party-post-after-pricing-kanimozhi-403505/