கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே உள்ள டிரினிட்டி ஆலயம் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாள்களில் வழிபாட்டு தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஆலாயம் மூடப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி இருந்துள்ளது.
ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் வந்துள்ளனர். அதில் ஒருவர், கோயில் வளாகத்திற்குள் நுழைந்து, நுழைவு வாயில் அருகே உள்ள கெபியில் கண்ணாடி கூண்டுக்குள் இருந்த செபஸ்தியார் சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
சத்தம் கேட்டு அப்பகுதிக்கு கோயில் காவலாளிகள் விரைந்துள்ளனர். அவர்களை பார்த்ததும், சிலையை உடைத்த நபர், இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பித்துள்ளார். இதுதொடர்பாக உடனடியாக கோயில் நிர்வாகத்துக்கும், காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், மர்ம நபர்களை கண்டறிய கோயிலுக்கு அருகிலுள்ள பகுதிகள் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.
இச்சம்பவம் குறித்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/sebastian-statue-defaced-in-coimbatore-church/