சென்னை கொடுங்கையூரில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்நிலையத்தில் மாணவர் ஒருவர் மீது போலீசார் தாக்குதல் நடத்தும் வீடியோவை போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ளனர்.
சென்னை கொடுங்கையூரில், கடந்த 14-ந் தேதி, வியாசர்பாடியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் என்பவர், சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த காவல்துறையினர் முககவசம் அணியவில்லை என்று கூறி அபராதம் விதித்ததுடன், அவர் எடுத்து வந்த சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதனால் மாணவருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரை காவல்நிலையம் அழைத்துச்சென்ற போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தெரியக்கூடாது என்பதற்காக காவல் நிலையித்தில் சிசிடிவி கேமராக்களை ஆஃப் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் காவல் நிலையம் சென்று கூறியபோது, அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையின் முடிவில், கொடுங்கையூர் தலைமைக்காவலர் பூமிநாதன், முதல்நிலை காவலர் உத்திரகுமரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமாக இருந்த ஆய்வாளர் நசீமாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி சென்னை ஓட்டேரியில், உள்ள புலியந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மாணவர் அப்துல் ரஹீம் மீது பொய்யான எஃப்ஐஆர் பதிந்து, கொடூரமாக தாக்கி, சித்ரவதை செய்து, மதரீதியாக இழிவுபடுத்தி, சிறையில் அடைத்து மிகப்பெரும் மனித உரிமை மீறலை செய்துள்ளது. மேலும், மாணவரை அச்சுறுத்தி சமாதான வீடியோ வெளியிட்டதோடு, ஆய்வாளர் நசீமாவை திட்டமிட்டே பாதுகாத்து, 2 காவலரை மட்டும் சஸ்பெண்ட் செய்து பிரச்சனை முடிந்ததுபோன்ற பிம்பத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறது. அனைத்து குற்றவாளிகள் மீதும் உடனடியாக எஃப்ஐஆர் பதிந்து, சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட அப்துல் ரஹீம், வழக்கறிஞர்கள், மனித உரிமை அமைப்புகள் – கட்சிகள், சட்டம் மற்றும் இதர கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடுகிறோம் என்று கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ள நிலையில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் காவல் நிலையத்தில் தாக்கப்படுவது குறித்து வீடியோ காட்சியை போராட்டகாரர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-kodungaiyur-police-attack-to-law-student-video-update-399940/