18 1 2022 தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று திரிபான ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவில் கொரோனா 3வது அலை உருவெடுக்க முக்கிய காரணியாக உள்ளது. இத்தொற்று தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத் துறைக்கு ஒரு புதிய சவாலாக அமைந்துள்ளது.
இதனால், தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில், தினசரி கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று திங்கள் கிழமை 23, 443 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 20 பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 13, 551 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 1, 52, 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைநகர் சென்னையை பொறுத்தவரை, 8, 591 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 60, 126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பூசி செலுத்துதற்கான முகாம்களையும் ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில், 60 வயது மேற்பட்டோருக்கான ‘இல்லம் தேடி பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி செலுத்தும் திட்டம் அரசு சார்பில் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் மருத்துவ செயளாலர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ‘இல்லம் தேடி பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இனி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும். தமிழ்நாட்டில் இதுவரை 92,522 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தற்போது 4.42 லட்சம் பேர் தகுதி உடையவர்களாக உள்ளனர்.
பொங்கலுக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் ஊருக்கு சென்றதால், கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா என்பது இரு நாட்களில் தெரியவரும். மருத்துவ கலந்தாய்வு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், முடிவு தெரிந்தவுடன் கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடப்படும்.” என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-in-tamil-booster-dose-vaccination-camp-will-be-held-in-tn-every-week-on-thursdays-398702/