வியாழன், 20 ஜனவரி, 2022

மெட்ரோ நகரங்களில் பாலின இடைவெளி… ஆண்களுக்கு அதிகளவில் தடுப்பூசி

 இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 954 பெண்கள் என்ற விகிதத்தில், ஜனவரி 18 ஆம் தேதி வரை சுமார் 158 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, இது கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதத்தில் 933ஐ விட அதிகமாகும். ஆனால் பெரு நகரங்களில் தடுப்பூசியில் பாலின இடைவெளியை இருப்பதை காட்டுகிறது.

ஜனவரி 18 வரை, மும்பையில் 1.10 கோடி ஆண்களுக்கும், 76.98 லட்சம் பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கு 694 பெண்கள் என்ற விகிதத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது நகரின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் பாலின விகிதமான 832 ஐ விட மிகக் குறைவாகும்.

டெல்லியிலும் இதே போன்ற ஏற்றத்தாழ்வை காணமுடிகிறது. கடந்த ஓராண்டில் 1.64 கோடி ஆண்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனால், பெண்களை பொறுத்தவரை 1.22 கோடி பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது, ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கும் 742 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. ஆனால், கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, டெல்லியில் பாலின விகிதம் 868 ஆக உள்ளது. இதே நிலைமை தான், பெங்களூரு மற்றும் சென்னையில் நீடிக்கிறது.

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை, ஆந்திரா, பீகார், அஸ்ஸாம், சத்தீஸ்கர், கேரளா, ஒடிசா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய ஒன்பது மாநிலங்களில் மட்டுமே பெண்களுக்கு அதிகளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக 23.65 கோடி தடுப்பூசிகள் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் செலுத்தப்பட்டுள்ளது. , ஆண்களுக்கு 12.18 கோடி டோஸ்களும், பெண்களுக்கு 11.41 கோடி டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கும் 936 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. 2011 மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 912 என்ற பாலின விகிதத்தை விட இது சற்று அதிகமாகும்.

பெரிய நகரங்களில் தடுப்பூசியில் உள்ள பாலின இடைவெளிக்கு, பல காரணங்களை வல்லுநர்கள் முன்வைக்கின்றனர்.

டெல்லியில் சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த பாலின இடைவெளியை கவனித்துள்ளோம். பல பணியிடங்களில் தடுப்பூசி கட்டாயம் என அறிவித்ததால், ஆண்களிடையை தடுப்பூசி விகிதம் அதிகமாக உள்ளது. பெண்களை விட ஆண்கள் அதிகம் உள்ள கட்டுமான தளங்களிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களாக, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காக சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறோம் என்றார்.

தனிப்பட்ட மற்றும் தொழில் காரணங்களுக்காக பெண்களை காட்டிலும் ஆண்கள் அதிகளவில் வெளியே செல்வதால், தடுப்பூசி செலுத்திட ஆண்களுக்கு குடும்பத்தினர் முக்கியத்தவம் அளிப்பதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

BMC கூடுதல் ஆணையர் சுரேஷ் ககானி கூறுகையில், வேலைக்காக மும்பைக்கு வரும் புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலோர் தங்கள் குடும்பங்களை சொந்த ஊர்களில் விட்டுவிடுகின்றன. எனவே ஆண் தொழிலாளர்கள் மக்கள்தொகையில் பெண்களை விட அதிகமாக உள்ளனர் என தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் உள்ள கோண்டியா போன்ற சில கிராமப்புற மாவட்டங்களில், ஆண்களை விட (8.50 லட்சம்) அதிகமான பெண்கள் (9.11 லட்சம்) டோஸ் பெற்றுள்ளனர். இதுகுறித்து கேள்வி கேட்டதற்கு, மாநிலத்தின் கோவிட்-19 பணிக்குழுவின் உறுப்பினர் சுபாஸ் சாலுங்கே கூறுகையில், இதற்கு ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் ஈடுபாடே காரணம்.

இந்த சுகாதாரப் பணியாளர்கள், தடுப்பூசி போட பெண்களை ஊக்குவித்தனர். வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் போது, பெண்களை வெளியே அழைத்து, தடுப்பூசி போடுவதற்கு ஆலோசனை வழங்குகிறார்கள் என்றார்.

டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் டெவலப்மென்ட் ஸ்டடீஸில் பெண்கள் ஆய்வுகளுக்கான மேம்பட்ட மையத்தின் தலைவர் பிந்துலட்சுமி கூறுகையில், தடுப்பூசி போர்டலில் ரெஜிஸ்டர் செய்வது, தடுப்பூசிகளைப் பெறுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு பெண்கள் அதிகளவில் ஆண்களை நம்பியிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

பல சமயங்களில், குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடுவதை எளிதாக்கும் வகையில், பல சந்தர்ப்பங்களில் பெண்கள் தடுப்பூசியைத் தேர்ந்தெடுப்பதைத் தாமதப்படுத்துகின்றனர் என்றார்.

எடுத்துக்காட்டாக, பால்கர் தாலுகாவில் வர்தினி கிராமத்தில் வசிக்கும் சுரேகா பாண்டே(24) என்பவர், தடுப்பூசி சான்றிதழ்களை மாவட்டம் கட்டாயமாக்கும் வரை அவரது மாமியார் தடுப்பூசி செலுத்தவிடவில்லை என கூறியுள்ளார். சுரேகா தனது முதல் டோஸை ஜனவரி 6 ஆம் தேதி தான் பெற்றுள்ளார். ஆனால், அவரது கிராமத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் நபர் அவரது கணவர் தான்.

எனது கணவர் உட்பட கிராமத்தில் பலருக்கு தடுப்பூசி போட்டப்பின, காய்ச்சல், தலைவலி ஏற்பட்டது. இதனால், வீட்டு வேலை பாதிக்கும் என்பதால் தனது மாமியார் தடுப்பூசி போட விடவில்லை என கூறப்படுகிறது.

உலகளாவிய சுகாதாரம் மற்றும் சுகாதாரக் கொள்கையின் ஆராய்ச்சியாளர் அனந்த் பன், இந்த பாலின இடைவெளிக்கு டிஜிட்டல் கல்வியறிவை கூறுகிறார்.

தேசிய குடும்ப நல ஆய்வு தரவின்படி, இந்தியாவில் நகர்ப்புறங்களில் 69.4% பெண்களும், கிராமப்புறங்களில் 46.6% பெண்களும் செல்போன் உபயோகின்றனர். ஆனால், 57.1% ஆண்களுடன் ஒப்பிடுகையில், 33.3% பெண்கள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

மொபைல் போன் மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் வரும் தடுப்பூசியால் கருவுறாமை, மாதவிடாய் சுழற்சியின் குறுக்கீடு போன்ற தவறான தகவலும் பெண்களை தடுப்பூசி செலுத்தவிடாமல் தடுக்கிறது” என தெரிவித்தார்.

மேலும், போலியோ, ஹெபடைடிஸ் அல்லது காசநோய் போன்ற குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு திட்டங்களில் கூட, தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பெண்கள் எப்போதும் ஆண்களை விட பின்தங்கியிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/india/metros-show-gender-gap-in-covid-19-vaccination-more-men-get-jabbed-399681/