16 1 2022 அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா (ஜனவரி.17) கொண்டாடப்படுகிறது. இந்நாளை ஒவ்வொரு ஆண்டும் அதிமுகவினர் படுஜோராக கொண்டாடும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வெளியிட்ட செய்தி பலரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
அதில், முன்னாள் முதல்வர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை (17.01.2022) காலை 10.00 மணியளவில் சென்னை, கிண்டி, தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் உருவச் சிலைக்கு சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 1977 முதல் 1987 வரை தொடர்ந்து 10 ஆண்டுகளில் 3 முறை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்ததை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன்றளவும் ஐக்கிய நாடுகள் சபையால் போற்றப்பட்ட சத்துணவுத் திட்டம், மதுரையில் 5ஆம் உலகத்தமிழ் மாநாடு, 1981ஆம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம், பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச சீருடை, காலணி மற்றும் பற்பொடி வழங்கும் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தியவர் எம்ஜிஆர் என குறிப்பிட்டுள்ளது.
எம்ஜிஆரை பெருமைப்படுத்துகின்ற வகையில், கலைஞர் 17.01.1990 அன்று சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார். அந்த விழாவிலே, “தனிப்பட்ட முறையிலே எனக்கும் எனதருமை நண்பர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எனக்கும் அவருக்குமான நட்புணர்வை, என்னையும் அவரையும் மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்களால் மட்டுமே தெரிந்திருக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.
இதுதவிர, சென்னை கிண்டியில் அவரால் உருவாக்கப்பட்ட மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் என்று பெயர் சூட்டியதோடு, அவரின் உருவ சிலையினையும் 1998ஆம் ஆண்டு திறந்து வைத்துப் பெருமை சேர்த்தவர் கலைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் இருந்த போது, கருணாநிதி பிறந்தநாள் தொடர்பாக எவ்வித விழாவையும் நடத்ததாத நிலையில், திமுக அரசின் இந்த அறிவிப்பு அதிமுகவினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-led-dmk-govt-plan-to-pay-homage-to-mgr-105th-birthday-397902/