டெல்லி இந்தியா கேட் பகுதியில் சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு கிரானைட் கற்களால் செய்யப்பட்ட பிரமாண்ட சிலை நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். சிலை அமைக்கும் பணி முடிவடையும் வரை அங்கு ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் அவரது சிலை காட்சிப்படுத்தப்படும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ஒட்டுமொத்த நாடும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில் இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு பிரமாண்டமான கிரானைட் சிலை அமைக்கப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இது நேதாஜிக்கு இந்தியா செலுத்தக்கூடிய நன்றிக்கடனாகும்.சிலை அமைக்கும் பணி முடிவடையும் வரை அங்கு ‘லேசர்’ வடிவிலான முப்பரிமாண நேதாஜி உருவம் அமைக்கப்படும். அதனை நேதாஜியின் 125-வது பிறந்தநாள் (ஜனவரி 23) திறந்துவைக்க உள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.
அந்த இடம் ஏன்?
பல போர்கள் மற்றும் மோதல்களில் உயிர்தியாகம் செய்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட அணையாத விளக்கு எனப்படும் அமர்ஜவான் ஜோதி அருகே இந்த சிலை நிறுவப்படவுள்ளது.
இந்த அறிவிப்பு வருவதற்கு ஒரு நாள் முன்பு தான், 50 ஆண்டுகளாக அணையாமல் இருந்த அமர் ஜவான் ஜோதி அணைக்கப்பட்டு அருகில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியா கேட் பகுதியில் 1972ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அமர்ஜவான் ஜோதியானது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது. நேற்று(ஜனவரி.21) மதியம், தேசிய போர் நினைவகத்தில் உள்ள அணையாத விளக்குடன் ஓரளவு இணைக்கப்பட்டது. இந்த தேசிய போர் நினைவகமானது, கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அரசால் கட்டப்பட்டது. வரவிருக்கும் குடியரசு தின விழா, மறுவடிவமைக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூவில் நடைபெறுவதாலும், போர் நினைவிடத்திற்குச் செல்லும் அணையாத விளக்கும் மற்றும் ஹாலோகிராம் செய்யப்பட்ட போஸ் சிலை ஆகியவை மூலமும், விழாவின் பழைய நடைமுறையில் மாற்றம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இடத்தின் வரலாறு
போஸ் சிலை நிறுவப்படும் இடம், 1930 களில் சர் எட்வின் லுட்யென்ஸால் மற்ற பெரிய நினைவுச்சின்னத்துடன் சேர்த்து கட்டப்பட்டது. அங்கு பிரிட்டன் மன்னர் ஜார்ஜ் சிலை அமைக்கப்பட்டிருந்தது. பின்னர், 1960களில் அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு கொரோனேஷன் பார்க் பகுதிக்கு மாற்றப்பட்டது.
கொரோனேஷன் பார்க் வடமேற்கு டெல்லியில் உள்ள புராரி சாலையில் அமைந்துள்ளது. மேலும், அப்பகுதி விக்டோரியா மகாராணி இந்தியாவின் பேரரசியாக அறிவிக்கப்பட்ட 1877 ஆம் ஆண்டு முதல் டெல்லி தர்பார் நடைபெற்ற இடமாக இருந்தது.
பின்னர், அதே இடம் 1903 ஆம் ஆண்டில் மன்னர் எட்வர்ட் VII பதவியேற்றதைக் கொண்டாடப் பயன்படுத்தப்பட்டது. இறுதியாக, 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி இந்தியாவின் பேரரசராக ஜார்ஜ் V மன்னர் முடிசூட்டப்பட்டதை நினைவுகூரும் தர்பார் நடைபெற்றது.
தொடர்ந்து, 1947இல் சுதந்திரம் கிடைத்ததை தொடர்ந்து, ராஜ்பாத்தில் 49 அடி கொண்ட ஜார்ஜ் V சிலை உட்பட பல மன்னர் சிலைகள் அகற்றப்பட்டு, கொரோனேஷன் பார்க் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
நேதாஜிக்கு ஏன்?
நேதாஜியின் 125-வது பிறந்தநாள் தினம், ஜனவரி 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஜனவரி 24 ஆம் தேதி ஆரம்பிக்கும் குடியரசு தின விழா கொண்டாட்டம், நேதாஜி 125ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஜனவரி 23-ம் தேதி குடியரசு தின விழா தொடங்கும் என அரசு அறிவித்தது. விழாவானது மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 அன்று நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேதாஜி ஹாலோகிராம் சிலையை பிரதமர் திறந்து வைக்கும் நாளில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அபதா பிரபந்தன் விருது பெற்றவர்களைக் கௌரவிக்கும் வகையிலும், பேரிடர் மேலாண்மைத் துறையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. ஏற்கனவே, நேதாஜியின் பிறந்தநாளை பராக்கிரம் திவாஸ் என்று கொண்டாடப்படும் என மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/explained/why-netaji-statue-is-being-installed-at-india-gate-400410/