திங்கள், 31 ஜனவரி, 2022

குறைய துவங்கிய பாசிட்டிவ் விகிதம்; இந்தியாவில் மூன்றாம் தொற்று முடிவுக்கு வருகிறதா?

 31 1 2022 declining Covid-19 positivity rate : கொரோனா தொற்று பரவல் கடந்த 10 நாட்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது பாசிட்டிவிட்டி ரேட்டும் குறைந்துள்ளது, இந்தியாவில் கொரோனா தொற்று மூன்றாம் அலை முடிவுக்கு வருவதை உறுதி செய்கிறது.

கடந்த இரண்டு நாட்களில் வாரத்திற்கான கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் வியாழக்கிழமை 16.48%-ல் இருந்து சனிக்கிழமை 15.63% ஆக குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிகமாக இருந்த பாசிட்டிவிட்டி விகிதம் தற்போது குறைய துவங்கியுள்ளது. மொத்தமாக சோதனை மேற்கொள்ளும் மக்கள் எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் எண்ணிக்கை விகிதத்தையே நாம் கோவிட்19 பாசிட்டிவிட்டி ரேட் என்று அழைக்கின்றோம். இந்த நோய் மக்கள்தொகையில் எவ்வளவு விரைவாக பரவுகிறது அல்லது எவ்வளவு பரவலாக உள்ளது என்பதை விளக்கும் முக்கியமான வழிகாட்டியாக உள்ளது.

கொரோனா மூன்றாம் தொற்றில் கொரோனா தொற்றால் பாதிக்கும் நபர்களைக் காட்டிலும் பாசிட்டிவ் விகிதத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. ஏன் என்றால் பெரும்பாலான நேரங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் குறைவான அறிகுறியே இருந்ததால் பலரும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவில்லை. மேலும் மக்கள் தங்கள் வீடுகளிலேயே கொரோனா சோதனை மேற்கொண்டதால் அதனை அதிகாரப்பூர்வ பதிவுகளில் பதிவு செய்ய முடியவில்லை.

இந்தியாவில் நான்கில் 3 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர் – சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா தொற்று பாசிட்டிவ் விகிதம் அரை சதவிகிதத்திற்கும் குறைவாக டிசம்பர் மூன்றாவது வாரத்தில் மூன்றாவது அலை ஆரம்பமாவதற்கு முன்பு நிலவியது. அதன் பின்னர் ஒமிக்ரான் மாறுபாட்டால் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கிய நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதன்முறையாக இந்த தொற்று பாசிட்டிவ் விகிதம் குறைந்துள்ளது.

குறைவு ஏற்பட்டாலும் 15% என்பது இன்னும் அதிகமான ஒன்று தான். கொரோனா தொற்று காலத்தை நாம் ஒட்டுமொத்தமாக கணக்கில் கொண்டால், சோதனை மேற்கொண்டவர்கள் மற்றும் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மொத்தமாக பாசிட்டிவ் விகிதம் 6%க்கும் குறைவாகவே உள்ளது. இரண்டாம் அலையின் போது மட்டும் ஒரு வாரத்திற்கான பாசிட்டிவ் விகிதம் மிக அதிகபட்சமாக 22% இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள 734 மாவட்டங்களில் 388 மாவட்டங்களில் தொடர்ந்து பாசிட்டிவ் விகிதம் 10%க்கும் அதிகமாக உள்ளது. 144 மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 5 – 10% என்ற நிலையில் உள்ளது. 202 மாவட்டங்கலில் பாசிட்டிவ் விகிதம் 5%க்கும் குறைவாக உள்ளது என்பதை மத்திய அரசின் சுகாதாரத்துறை தரவுகள் கூறுகின்றனர்.

தொடர்ந்து கேரளா கோவிட்19 பாசிட்டிவ் விகிதத்தில் முன்னிலை வகித்து வருகிறது. அதன் பெரும்பாலான மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 40% ஆக உள்ளது. எர்ணாக்குளம், கோட்டயம், இடுக்கி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதமானது 50%க்கும் அதிகமாக உள்ளது. ஹிமாச்சல் பிரதேசம், அசாம், ஹரியானா மாநிலங்களில் தலா ஒரு மாவட்டமும், அருணாச்சல் பிரதேசத்தில் மூன்றூ மாவட்டங்களும் 50%க்கும் மேலாக பாசிட்டிவ் விகிதங்களைக் கொண்டுள்ளன.

கடந்த ஐந்து நாட்களில் கேரளா 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்து வருகிறது. இதர பெரிய மாநிலங்களில் கொரோனா தொற்று குறைவதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை. ஆந்திராவில் தொற்று குறையவில்லை. நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிப்படைகின்றனர். அதே போன்று கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் நபர்களுக்கு மேல் தொற்று ஏற்படுகிறது. ஆனால் மூன்றாம் அலையின் உச்சத்தை இம்மாநிலங்கள் சந்தித்துவிட்டது போல் தான் இருக்கிறது. தற்போது தொற்று குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளன.

source https://tamil.indianexpress.com/explained/why-declining-covid-19-positivity-rate-could-indicate-ebb-of-third-wave-404267/