16 5 2022
இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக அனுப்புவள்ள அத்தியாவசிய மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் சேமிப்பு கிடங்கை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த மாதம் சட்டப்பேரவையில் பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ரூ28 கோடி மதிப்பு மருந்துகள் அனுப்புவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆய்வுக்கு பின் பேசிய அமைச்சர், “மொத்தமாக 137 வகை மருந்துகள் அனுப்பப்படவுள்ளன. அதில் முதற்கட்டமாக, ரூ8.87 கோடி மதிப்பிலான 55 மருந்துகள் தற்போது அனுப்பப்படுகிறது. அவை மிகவும் பாதுகாப்பாக 700 பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. ஏழு மருந்து வகைகளுக்கு குளிர்சாதன வசதி தேவை என்பதால், அவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாநிலத்திற்கு 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் இருப்பு உள்ளது. சுமார் 240 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள், 32 சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளது. புதிய மருந்து சேமிப்பு கிடங்கு சென்னையில் 35 ஆயிரம் சதுரஅடியில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இது, மாநிலத்தின் மிகப்பெரிய சேமிப்பு கிடங்கு ஆகும்.
இந்த மருந்துகள் இலங்கைக்கு அனுப்பப்படும் அத்தியாவசிய பொருள்களுடன் சேர்த்து வழங்கப்படும். இலங்கையின் எந்த பகுதிக்கு பொருள்கள் செல்ல வேண்டும் என்பதை, மத்திய அரசு தான் தீர்மானிக்கும்” என்றார்.
இலங்கைக்கு மருந்துப் பொருட்களுக்கு உதவ முன்வந்த நாட்டிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-send-medicine-to-srilanka-minister-ma-subramanian-454273/