வியாழன், 19 மே, 2022

தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது

 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. 142வது பிரிவை பயன்படுத்தி, குற்றவாளியை விடுவிப்பதே சரியானது” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

சட்டப்பிரிவு 142 ஒரு வழக்கில் முழுமையான நீதியை வழங்க நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்க உதவுகிறது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) கீழ் ஒரு வழக்கில் மன்னிப்பு வழங்குவதற்கு ஆளுநர் அல்ல, குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்ற மத்திய அரசின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

இது பிரிவு 161-ஐ “செத்த கடிதம்” ஆக்கி, கடந்த 70 ஆண்டுகளாக கொலை வழக்குகளில் ஆளுநர்களால் வழங்கப்பட்ட மன்னிப்பு செல்லாது என்று ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கும்.

மாநில அமைச்சரவை முழுமையாக விசாரித்த பிறகே பேரறிவாளனை விடுதலை செய்யும் முடிவை எடுத்துள்ளது. ஆனால், மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்புச் சட்டப்படி தவறு. மீண்டும் இந்த விவகாரத்தை ஆளுநர் முடிவுக்கே அனுப்ப நாங்கள் விரும்பவில்லை.

அரசியலமைப்புச் சட்டம் 161வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால், உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க 142 சட்டப்பிரிவு வழி வகுகிறது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவரது குடும்பத்தினர் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு வெளியே இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

அறிவு என்கிற பேரறிவாளன் ஜூன் 11, 1991 அன்று கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 19.

முன்னாள் பிரதமரைக் கொல்ல, சதிச் செயலில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் தலைவரான சிவராசனுக்கு’ இரண்டு 9 வோல்ட் ‘கோல்டன் பவர்’ பேட்டரி செல்களை வாங்கி கொடுத்ததாக பேரறிவாளன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

1998 இல் தடா நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் அடுத்த ஆண்டு தண்டனையை உறுதி செய்தது, ஆனால் 2014 இல் அதை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. 2018ம் ஆண்டு, தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தும், விடுதலை தாமதம் ஆனதால், பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

இந்நிலையில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆா். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமா்வு முன் கடந்த மே 11ஆம் தேதி பேரறிவாளன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை ஏன் விடுவிக்க முடியாது? குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநருக்கு யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை தீர்மானிக்க’ பேரறிவாளன் ஏன் நடுவில் சிக்க வேண்டும்?” என்று நீதிபதிகள் மத்திய அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பினர்.

இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துது.

பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவரை விரைவில் பார்க்க விரும்புவதாக நீதிபதி கேடி தாமஸ் தெரிவித்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இடம் பேசிய தாமஸ், “பேரறிவாளன், நேரம் கிடைத்தால் என்னைப் பார்க்கவும்.. ‘நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு, 50 வயதில் விடுதலையான அவரிடம் நான் என்ன சொல்வது? அவருக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்… அவர் தனது அன்பானவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். மேலும் அவருடைய தாயார் முழுப் புகழுக்கும் உரியவள்,” என்றார்.

1999-ம் ஆண்டு பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதித்த உச்சநீதிமன்ற நீதிபதி தாமஸ், பேரறிவாளனை விடுவித்த உத்தரவு’ மற்ற அனைத்து குற்றவாளிகளுக்கும் பொருந்தும் என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/what-supreme-court-says-in-perarivalan-release-verdict-455434/