வெள்ளி, 20 மே, 2022

இந்தியாவிற்கு ஏன் தேவை தமிழ்நாட்டு மாடல் வளர்ச்சி?

 

இந்தியாவிற்கு ஏன் தேவை தமிழ்நாட்டு மாடல் வளர்ச்சி? 20 5 2022

நமது நாட்டில் பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. எனினும், தமிழகம் மற்றும் கேரளாவில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. பணவீக்கம் என்ற வார்த்தையும் தற்போது நாட்டு மக்களிடம் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. ‘பல நலத்திட்டங்களை உள்ளடக்கிய திராவிடல் மாடல் ஆட்சி காரணமாகவே பணவீக்கம் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

இந்த நிலையில், பணவீக்கம், தமிழ்நாடு, குஜராத் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களின் வளர்ச்சி மாடல்களின் ஒப்பீட்டை இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம். இந்த 3 மாநிலங்களின் மாடல்களும் பிற மாநிலங்களுக்கான கொள்கைகளை வகுப்பதற்கு ஒரு வழிகாட்டியாக இருக்க உதவும். பணவீக்கத்தைத் தடுப்பதற்கான பணிகளில் நமது பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்களில் ஒருவராவது வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியையும் நீண்ட கால உத்திகளையும் வகுப்பதற்கான தேவை தற்போதைய காலகட்டத்தின் அவசியமாகும்.

மேலே குறிப்பிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு வளர்ச்சி அணுகுமுறைகள், அதனால் கிடைத்த பலன்கள் ஆகியவற்றையும் பார்ப்போம். இந்த மூன்று மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும் வளர்ச்சி மாடல்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாக இருக்கின்றன. முதலாவதாக, இங்கு பீகார் மற்றும் அதன் வளர்ச்சி மாடலால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

இந்தப் பட்டியலில், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம் மற்றும் அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் அடங்கும். இந்த மாநிலங்களில் பலவும் தேசிய சராசரியுடன் ஒப்பிடக்கூடிய விகிதங்களில் வளர்ந்து வருகின்றன. இந்த மாநிலங்கள் மிகக் குறைந்த தனிநபர் வருமானம், குறைந்த அளவிலான மனித அல்லது சமூக வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

பீகார் மாடலில், தொழிலாளர்கள் இன்னும் விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ளனர். பிற மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்பவர்களின் எண்ணிக்கையும் இந்த மாநிலத்தில் அதிகம் உள்ளது. இந்த மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தொழில்துறையின் பங்கு தேசிய சராசரியை விட மிகவும் குறைவாக உள்ளது. வளர்ச்சியை அதிகரிக்கக் கூடிய குறிப்பிடத்தக்க நவீன தொழில்துறை மையங்கள் எதுவும் அங்கு இல்லை.

சில பெரிய தொழில்சாலைகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமானவையாகவே இருக்கின்றன. விவசாயம் அல்லாத தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (MSMEs) குறைந்த ஊதிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கச் செலவினங்களும் மாநிலத்தின் சொந்த வளங்களைக் காட்டிலும் மத்திய அரசு நிதியையே பெரிதும் சார்ந்துள்ளன. கூட்டாட்சி முறையில் மாநிலங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி எந்த அளவுக்கு முக்கியம் என்பதையே இது காட்டுகிறது.

அடுத்ததாக குஜராத் மாடலைப் பார்ப்போம். வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் மாநிலமான குஜராத்தில் தனி நபர் வருமானம் மிகவும் அதிகமாகும். பீகாரைக் காட்டிலும் இந்த மாநிலத்தில் தனிநபர் வருமானம் 6 மடங்கு அதிகம். வேளாண்மை சார்ந்த பணிகளில்தான் குஜராத் தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர். தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாகவும் குஜராத் திகழ்கிறது. தொழிற்சாலைகளைச் சார்ந்த மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி தேசிய சராசரியைவிட 44 சதவீதம் அதிகமாக உள்ளது.

பாரம்பரிய வேளாண் பதப்படுத்தும் தொழில்களுடன், போக்குவரத்து உபகரணங்கள், மருந்துகள், பெட்ரோகெமிக்கல்ஸ், தகவல் தொழில்நுட்பச் சேவைகள் மற்றும் நவீன நிதி சேவைகள் போன்ற நவீன தொழில்களும் அதன் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கின்றன. உள்கட்டமைப்பும் மிகவும் வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக வளர்ச்சியில், இந்த மாநிலம் நாட்டின் முன்னணி மாநிலங்களை விட மிகவும் பின்தங்கியுள்ளது என்பது இதில் வேடிக்கையான ஒரு விஷயமாக இருக்கிறது.

மூன்றாவதாக, நான் இங்கே குறிப்பிடப்போவது தமிழ்நாடு. இது மிகவும் வளர்ச்சி அடைந்த மாடலைக் கொண்டிருக்கிறது. தனிநபர் வருமானமும் அதிகம் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த மாநிலமும் குஜராத்தைப் போன்று அதிக தொழிற்சாலைகளைக் கொண்டிருக்கின்றன. தேசிய அளவில் ஒப்பிடுகையில் 34 சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ள மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது.
குஜராத்தைப் போன்று அல்லாமல், தமிழகம் வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 30 சதவீதமாகக் குறைத்துள்ளது. மேலும், சமூக வளர்ச்சியில் நன்கு முன்னேறி இருக்கிறது. மத்திய அரசின் நிதியுதவிகளை தமிழகம் சார்ந்திருப்பது பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் குஜராத்துடன் ஒப்பிடுகையில் தமிழகம் குறைவாகவே மத்திய அரசின் நிதியுதவியை சார்ந்துள்ளது. இந்தியச் சூழ்நிலைகளில் தமிழகம் மிகச் சிறந்த வெற்றிகரமான மாடலைக் கொண்டிருக்கிறது. டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும் இதே போன்ற மாடலை பின்பற்றி வருகிறது.

கேரளாவும் சிலவற்றில் தங்களை மேம்படுத்திக் கொண்டால், அறிவுடன் சிறந்த பொருளாதார மையமாக கேரளா திகழும். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள 3 வளர்ச்சி மாடல்களும் பல்வேறு மாநிலங்களில் நீண்ட கால வளர்ச்சிக்கான வழிகாட்டியாகத் திகழும்.

தமிழக மாடலைப் பின்பற்றும் மாநிலங்கள் அதை அப்படியே பின்பற்றினால் போதுமானதாகும். குஜராத் மாடலை பின்பற்றும் மாநிலங்கள் கல்வி மற்றும் சுகாதாரச் சேவைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். பிகார் மாடலைப் பின்பற்றும் மாநிலங்கள் தமிழக மாடலுக்கு தங்களது உத்திகளை மாற்றிக் கொள்ள வேண்டும். எனினும், மத்திய அரசின் நிதிகளை அதிகம் சார்ந்திருக்கும் மாநிலங்கள் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பது கடினம்தான். வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் பார்க்க வேண்டிய மாற்றம் ஒரே இரவில் நடந்துவிடாது. இது அடுத்த 10 ஆண்டுகளில் அல்லது அதற்கு மேல் மட்டுமே நடக்க சாத்தியம் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டு மாடலே தற்போதைய தேவையாகும். மற்ற மாநிலங்களும் தமிழ்நாட்டு மாடலை பின்பற்றலாம் என்பதில் தயக்கம் தேவையில்லை.

-கட்டுரையாளர், சுதிப்தோ முண்டில்,  வளர்ச்சி கற்றல் மையத்தின் தலைவர், திருவனந்தபுரம்.

-தமிழில் மணிகண்டன்

source https://news7tamil.live/three-development-models-that-can-guide-indian-state-economies.html