சனி, 14 மே, 2022

தேர்வு எழுத வராத 1.18 லட்சம் மாணவர்கள்? அதிர்ச்சித் தகவல்

 1.18 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வராத காரணம் குறித்து பள்ளி கல்வித் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதுவரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 42,024 பேரும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 43,533 பேரும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 32,674 பேரும் என 1,18,231 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.

நடப்பு கல்வியாண்டில் 26,77,503 மாணவர்கள் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத பதிவு செய்திருந்த நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட சமூக – பொருளாதார நெருக்கடி காரணமாக 1,18,231 பேர் பொதுத்தேர்வில் பங்கேற்க இயலாத அவலம் ஏற்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அந்த காரணங்களையும் விவரித்தனர். கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியால் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துவிட்டதாகவும், சிலர் பள்ளிப் படிப்பை கைவிட்டு ஐடிஐ, பாலிடெக்னிக் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர்ந்துவிட்டதும் 1.18 லட்சம் மாணவர்களின் ஆப்சென்டுக்கு காரணமாக உள்ளது.

நடப்பு கல்வியாண்டில் 1.80 லட்சம் இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், 1.18 லட்சம் பேரின் இடைநிற்றல் அதிர்ச்சியளிப்பதாகவும், வரும் ஆண்டுகளில் இடைநிற்றலைத் தவிர்க்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

14 5 2022

https://news7tamil.live/1-18-lakh-students-absent-in-tn-public-exam-why.html