வெள்ளி, 20 மே, 2022

மீண்டும் இந்தியா வசமாகுமா கச்சத்தீவு?

 

40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசியலில் முக்கிய பேசுபொருளாக அமைந்திருப்பது கச்சத்தீவு விவகாரம். கச்சத்தீவை மீட்போம், தமிழ்நாடு மீனவர்கள் நலனை நிலைநாட்டுவோம் என்பது அரசியல் கட்சிகளின் வழக்கமான வாக்குறுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு சிறிய நிலப்பரப்புதான் கச்சத்தீவு. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக சென்னை மாகாணத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 20ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, கச்சத்தீவில் அமைந்திருந்த புகழ்பெற்ற அந்தோணியார் தேவாலயத்திற்கு தமிழ்நாடு மற்றும் இலங்கையிலிருந்து பக்தர்கள் சென்று வருவது என அமைதி தீவாகவே இருந்து வந்தது.

1920-க்கு பிறகே கச்சத்தீவை சொந்தம் கொண்டாட தொடங்கியது இலங்கை. அதன்பிறகே இரு நாடுகளும் கச்சத்தீவு தங்களுக்கே சொந்தம் என பேச தொடங்கின.1974-ல் பிரதமர் இந்திராகாந்திக்கும், இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகேவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டின் கருத்தை கேட்காமலே முடிவு செய்யப்பட்டது என சர்ச்சை கிளம்பியது.

தமிழ்நாட்டில் மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடித்து கொள்ளலாம், மீன் வலைகளை கச்சத்தீவில்  உலர வைத்து கொள்ளலாம், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ளலாம் போன்ற உரிமைகள் வழங்கப்பட்டிருக்கிறது என மத்திய அரசு உறுதியளித்து, தமிழ்நாட்டில் எழுந்த பிரச்னைகளை சமாளித்தது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு கடைபிடிக்கவில்லை என்பதே நிதர்சனம். கச்சத்தீவை ஒட்டி மீன் பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை சிறை பிடிப்பது, சுட்டு கொல்வது என தொடர்ந்து கச்சத்தீவு மீதான தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியே வந்தது.

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது செல்லாது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 40 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசியல் கட்சிகள் அனைத்தும் கச்சத்தீவை மீட்போம் என்று கூறி வருகின்றன. தற்போது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அதிபர் ராஜபக்சே பதவி விலக கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன.  தொடர்ந்து மக்கள் அரசுக்கு எதிராக போராடி வரும் சூழலில் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் இந்த நெருக்கடி நிலையை பயன்படுத்தி இந்தியா, கச்சத்தீவை மீட்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கை மன்னார் மாவட்ட மீனவ சங்கத்தினர் பேசுகையில், கச்சத்தீவை நீண்ட கால குத்தகை அடிப்படையில் இந்தியாவிற்கு வழங்க இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் இலங்கையின் பொருளாதாரத்திற்காக இவ்வாறு தீவுகளை விற்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இலங்கை பயணத்தின்போது கச்சத்தீவு மீட்பு விவகாரம் குறித்து பரவலாக பேசப்பட்டது. அண்ணாமலையின் இலங்கை பயணமே இந்த விவகாரத்திற்குத்தான் என்று பாஜக துணைத்தலைவர் விபி துரைசாமி தெரிவித்திருந்தார்.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதில் திமுக அரசின் மீது பெரிய விமர்சனங்கள் இருந்துவரும் சூழலில் அதை பாஜக கையில் எடுத்திருக்கிறதா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. வரும் நாட்களில் கச்சத்தீவு விவகாரம் தமிழக அரசியலில் விஸ்வரூபம் எடுக்கும் என தெரிகிறது.



source https://news7tamil.live/will-india-get-kachchatheevu-again-srilanka.html