ஞாயிறு, 15 மே, 2022

உர விநியோகத்தில் உள்ள சவால்கள்

 

Harikishan Sharma

Explained: The fertiliser challenge: காரீஃப் பருவ விதைப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் உரங்களின் விநியோகத்தில் ஏற்பட்ட தடை காரணமாக, உரங்களின் தேவையை பூர்த்தி செய்யும் சவாலை இந்தியா எதிர்கொள்கிறது. வரவிருக்கும் காரீஃப் பருவத்தில் உரத் தட்டுப்பாடு இருக்காது என்று அரசாங்கம் கூறி வந்தாலும், புதிய இடங்களில் இருந்து உரங்களை வாங்குவது, விலையுயர்ந்த மூலப்பொருட்கள் மற்றும் போக்குவரத்து ஆகியவை முக்கிய சவால்களாக இருக்கும்.

கொரோனா மற்றும் உக்ரைன் போர் உர விநியோகத்தை எவ்வாறு பாதித்துள்ளது?

கொரோனா தொற்றுநோய் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் உரங்களின் உற்பத்தி, இறக்குமதி மற்றும் போக்குவரத்தை பாதித்துள்ளது. சீனா போன்ற முக்கிய உர ஏற்றுமதியாளர்கள், தங்கள் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவைக் கருத்தில் கொண்டு தங்கள் ஏற்றுமதியை படிப்படியாகக் குறைத்துள்ளனர். இது இந்தியா போன்ற நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்தியா 40-45% பாஸ்பேடிக் இறக்குமதியை சீனாவிலிருந்து பெறுகிறது. தவிர, ஐரோப்பா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளில் உரங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்துள்ள நிலையில், வழங்கல் தரப்பு நாடுகள் விநியோகத் தடைகளை எதிர்கொண்டுள்ளன.

ஏப்ரல் 19 அன்று நடைபெற்ற காரீஃப் பருவ மாநாட்டில் பேசிய உரத்துறை செயலர் ராஜேஷ் குமார் சதுர்வேதி, “தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையால்” உர விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டிஏபி (டைஅம்மோனியம் பாஸ்பேட்) உரம் தயாரிப்பதற்காக ரஷ்யாவிலிருந்து அம்மோனியாவை மொராக்கோ கொள்முதல் செய்கிறது என்று கூறினார்.

இந்தியாவிற்கு எவ்வளவு உரம் தேவைப்படுகிறது?

காரீஃப் பருவம் (ஜூன்-அக்டோபர்) இந்தியாவின் உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் ஓர் ஆண்டில் விளையக்கூடிய உணவு தானியங்களில் பாதியளவு இந்தப் பருவத்தில் விளைகிறது. இதேபோல், மூன்றில் ஒரு பங்கு பருப்பு வகைகள் மற்றும் மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய் வித்துக்கள் இந்த பருவத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, கணிசமான அளவு உரம் தேவைப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், பயிர் சீசன் தொடங்கும் முன், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை, உரங்களின் தேவையை மதிப்பீடு செய்து, சப்ளையை உறுதி செய்ய, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்து வருகிறது. காரீஃப் 2022 பருவத்துக்கு, 354.34 LMT தேவை என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது, இதில் யூரியா 179 LMT, DAP 58.82 LMT, மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (MoP) 19.81 LMT, NPK (நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ்) 63.71 LMT, மற்றும் SSP 33 LMT.

உரத் தேவை ஒவ்வொரு மாதமும் தேவைக்கேற்ப மாறுபடும், இது பயிர் விதைக்கும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டது, இது மீண்டும் பிராந்தியத்திற்கு பிராந்தியத்திற்கு மாறுபடும். உதாரணமாக, ஜூன்-ஆகஸ்ட் காலகட்டத்தில் யூரியாவின் தேவை உச்சத்தில் இருக்கும். அதேநேரம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் யூரியாவின் தேவை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும். மேலும் காரீஃப் பருவத்திற்கான உரங்களின் விநியோகத்தை உறுதி செய்ய அரசாங்கம் இந்த இரண்டு மாதங்களையும் பயன்படுத்துகிறது.

இருப்பு எவ்வளவு?

உரத்துறைச் செயலாளர் சதுர்வேதி பகிர்ந்துள்ள தரவுகளின்படி, காரீஃப் பருவத்தில் கிடைக்கும் உரத்தின் தொடக்க இருப்பு 125.5 LMT அல்லது தேவையில் 35% ஆகும். தனிப்பட்ட உரங்களில், யூரியா இருப்பு மொத்த தேவையில் 34.62%, டிஏபி இருப்பு 41.65%, MoP இருப்பு 30.29%, NPK இருப்பு 25.33% மற்றும் SSP இருப்பு 51.52% ஆகும்.

உள்நாட்டில் எவ்வளவு உற்பத்தி செய்யலாம்?

154.22 LMT யூரியா, 27.92 LMT DAP, 48.65 LMT NPK மற்றும் 24 LMT SSP உட்பட, காரீஃப் பருவத்தில் உள்நாட்டில் உரங்களின் உற்பத்தி 254.79 LMT ஐ தொடும் என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது.

கோட்பாட்டளவில், கையிருப்பு மற்றும் “எதிர்பார்க்கப்படும்” உள்நாட்டு உற்பத்தி உரத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும். இருப்பினும், உக்ரைன் போர் இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் மூலப்பொருட்களின் விநியோகத்தை சீர்குலைத்துள்ளது, இது உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் 104.72 LMT உரங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறது, அதில் பெரும்பாலானவை யூரியா மற்றும் டிஏபி.

“கிடைக்கக்கூடிய மொத்த உரங்களின் அளவு” என்பது, கையிருப்பு, உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி ஆகியவற்றை சேர்த்து 485.59 LMT ஆக இருக்கும்.

இதனை எதிர்ப்பார்த்து, “காரிஃப் பருவத்தில் நாம் உரங்கள் தொடர்பாக எந்த பிரச்சனையும் சந்திக்க வாய்ப்பில்லை” என உர மாநாட்டில் செயலாளர் சதுர்வேதி கூறினார்.

விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் விலையை எவ்வாறு பாதித்தன?

சமீபத்திய மாதங்களில் மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் போக்குவரத்து மற்றும் சரக்கு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கொரோனா சமயத்தில் போக்குவரத்தில் ஏற்பட்ட இடையூறுகளால், கப்பல்களுக்கான சராசரி சரக்குக் கட்டணங்கள் நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. தவிர, டிஏபி, யூரியா போன்ற உரங்களின் விலையும், அம்மோனியா, பாஸ்பேடிக் அமிலம் போன்ற மூலப்பொருட்களின் விலையும் 250-300% வரை உயர்ந்துள்ளது.

விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், அரசாங்கம் 2022 காரிஃப் பருவத்திற்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய (NBS) விகிதங்களை உயர்த்தியுள்ளது. நைட்ரஜன் (N)க்கான NBS விகிதங்கள் கடந்த காரிஃப் பருவத்தில் கிலோ ஒன்றுக்கு 18.78 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது ஏப்ரல்-செப்டம்பர் 2022 க்கு 389% உயர்த்தப்பட்டு கிலோ ஒன்றுக்கு 91.96 ரூபாயாக உள்ளது. இதேபோல், பாஸ்பேட் (P) க்கு 60% அதிகரித்து கிலோவுக்கு ரூ. 45.32ல் இருந்து கிலோவுக்கு ரூ.72.74 ஆகவும், பொட்டாஷ் (கே) க்கு 150% அதிகரித்து கிலோவுக்கு ரூ.10.12ல் இருந்து கிலோவுக்கு ரூ.25.31 ஆகவும், கந்தகத்திற்கு (சல்பர்) 192% அதிகரித்து கிலோவுக்கு ரூ 2.37ல் இருந்து கிலோவுக்கு ரூ 6.94 ஆகவும் உள்ளது. கடந்த நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.1.62 கோடியாக இருந்த மொத்த உர மானியத் தொகை இந்த நிதியாண்டில் ரூ.2.5 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உர விநியோகத்தை அரசு எவ்வாறு உயர்த்த உள்ளது?

உணவுத்துறை செயலாளரின் கூற்றுப்படி, பிப்ரவரி 24 அன்று உக்ரைன் போரின் தொடக்கத்தில் இருந்து இந்தியா ரஷ்யாவிடமிருந்து 3.60 LMT உரங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதைத் தவிர, இந்தியா ரஷ்ய நிறுவனங்களுடன் 3 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2.5 LMT DAP/NPK உர விநியோகத்திற்காக C2C (கார்ப்பரேஷனுக்கு கார்ப்பரேசன்) விநியோக ஏற்பாட்டைச் செய்துள்ளது. மேலும், DAP (4 LMT), MOP (10 LMT) மற்றும் NPK (8 LMT) ஆகியவற்றின் கூடுதல் விநியோகத்திற்கும் ரஷ்யா உறுதியளித்தது. சவூதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற பிற நாடுகளில் இருந்து உர விநியோகத்தைப் பெற இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஈரானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 15 LMT யூரியாவை மூன்று ஆண்டுகளுக்கு நீண்ட கால ஏற்பாட்டின் கீழ் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சதுர்வேதி கூறினார். ஒரு குறுகிய கால ஒப்பந்தத்தின் கீழ், இந்திய நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் 2022-23க்கு சவூதி அரேபியாவிடமிருந்து 25 LMT DAP/NPKஐப் பெற்றுள்ளன; சப்ளை தொடங்கிவிட்டது என்றும், ஒவ்வொரு மாதமும் இந்தியா 30,000 மெட்ரிக் டன் டிஏபியைப் பெறும் என்றும் சதுர்வேதி கூறினார்.

யூரியாவின் உள்நாட்டு உற்பத்திக்காக, அரசாங்கம் மேட்டிக்ஸ் (மேற்கு வங்கம்), ராமகுண்டம் (தெலுங்கானா) மற்றும் கோரக்பூர் (உ.பி.) ஆலைகளில் கவனம் செலுத்துகிறது, மேலும் சிந்த்ரி மற்றும் பாரௌனியில் உள்ள மற்ற இரண்டு அலகுகளை புதுப்பிக்கிறது. ஆண்டுக்கு 10 LMT யூரியாவைப் பெறுவதற்காக ஓமானுடன் நீண்ட கால விநியோக ஒப்பந்தத்தையும் இந்தியா செய்துகொண்டுள்ளது.

மூலப்பொருட்களின் நிலை என்ன?

காரீஃப் 2022 இன் போது பொட்டாஷின் தேவை 19.81 LMT என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 5 LMT கையிருப்பு உள்ளது. இந்தியா 23.18 LMT இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறது, இது மொத்த இருப்பை 28.18 LMT ஆக மாற்றும்.

பொட்டாஷ் மூலப்பொருளுக்கு இந்தியா இறக்குமதியை நம்பியுள்ளது, பொட்டாஷ் உரங்கள் உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பெலாரஸ் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அடுத்து, பொட்டாஷின் சர்வதேச விலைகள் டிசம்பர் 2021 இல் ஒரு மெட்ரிக் டன்னுக்கு $445ல் இருந்து கடந்த மாதம் ஒரு MTக்கு $600 ஆக அதிகரித்துள்ளது.

பெலாரஸில் இருந்து பொட்டாஷ் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா இப்போது கனடாவில் இருந்து 12 LMT பொட்டாஷ் சப்ளை பெற்றுள்ளதாக உரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

மார்ச் 21 அன்று, 8.75 LMT கூடுதல் அளவு பிற நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஜோர்டானிலிருந்து பெறப்பட்டுள்ளது.

ராக் பாஸ்பேட் போன்ற மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே சுரங்கங்கள் மூலம் பெறுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விருப்பத்தை ஆராய்வதற்காக, அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

மாநில அரசுகளிடம் மத்திய அரசு என்ன எதிர்பார்க்கிறது?

காரிஃப் விதைப்பு தொடங்குவதற்கு முன்னதாக, தேவைக்கேற்ப உர விநியோகத்தைச் சீராக்க “சிறு- திட்டமிடல்” செய்யுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், வரக்கூடிய உர அளவுகளை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு ரயில் ரேக்குகளை சரியான நேரத்தில் இறக்குவதை உறுதி செய்யுமாறும், நானோ யூரியா போன்ற மாற்று உரங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், உரங்களை மாற்றுதல், பதுக்கல் மற்றும் கறுப்பு சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிராக “கடுமையான” நடவடிக்கை எடுக்கவும், மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/explained/kharif-sowing-fertilisers-requirement-ukraine-war-explained-453714/