வெள்ளி, 13 மே, 2022

இலங்கை நெருக்கடியில் திருப்புமுனை; பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்கே

12 5 2022 இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் நாட்டின் இந்த நிலைக்கு பொறுப்பேற்று ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வேண்டும் என்று கூறி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைதியாக நடைபெற்று வந்த இந்த போராட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வன்முறை வெடித்து வரும் நிலையில், இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ராஜபச்சே ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.

ஆளும்கட்சி அமைச்சர்கள் பிரதமர் மகிந்தா ராஜபக்சே உள்ளிட்ட பலரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்கள் போராட்டக்காரர்களால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.  இதன் காரணமாக இலங்கையில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வன்முறையை கட்டுக்கொண்டுவர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

தற்போது வன்முறை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மீண்டும் அசம்பாவித சம்பங்கள் ஏற்படாமல் தடுக்க ராணுவம் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனிடையே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்துடன் திரிகோணமலையில் தஞ்சமடைந்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் இடைக்கால அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே, இடைக்கால பிரதமராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே விடுத்த அழைப்பை எஸ்ஜேபி-கட்சியின் சஜித் பிரேமதாசா நிராகரித்துள்ளார்.  ஆனாலும் இடைக்கால அரசை அமைக்க அதிபர் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே, இலங்கை மத்திய வங்கியின் கவர்னரான நந்தலால் வீரசிங்கே இன்னும் இரண்டு நாட்களில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் மேலும் சீர்குலைந்துவிடும் என்றும், அடுத்த இரண்டு வாரத்திற்கு இதே நிலை தொடர்ந்தால் தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவதாகவும் கூறியுள்ளார். இதனால், இலங்கையில் இடைக்கால புதிய அரசு நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் ராஜபக்சேக்கள் இல்லாத அமைச்சரவையை நியமிப்பேன் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் ராஜபச்சே மீதான மனநிலை மாறும் என்று நம்புவதாக கூறியுள்ளார். இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்றார்.

முன்னதாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் ரணில் விக்கிரமசிங்கே ஆகிய இருவரும் நேற்று ஆலோசனை நடத்தியதாகவும், பிரதமராக பதவியேற்க ராஜபக்சே விடுத்த அழைப்பு குறித்து ரணில் பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியானது. மேலும், நெருக்கடி நிலை காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்தா ராஜபக்சே ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு கூறியதாக செய்திகள் வெளியானது. மேலும், ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இலங்கை பொதுஜன பெரமுன கட்சிய சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து வருவதால், அவர் இலங்கையின் இடைக்கால பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை பொருளாதார நெருக்கடியிலும் மக்கள் கிளர்ச்சியிலும் நிலைகுலைந்துள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்றார். ரணில் விக்கிரமசிங்கே இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பொறுப்பை பெற்று கொண்டார். ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 26வது பிரதமராக பதவியேற்றார்.

 source https://tamil.indianexpress.com/international/ranil-wickremesinghe-will-be-appointed-as-the-new-prime-minister-of-sri-lanka-452868/