செவ்வாய், 24 மே, 2022

குரங்கு காய்ச்சல் என்றால் என்ன?

 23 5 2022 

உலகின் பல பகுதிகளில் கிட்டத்தட்ட 100 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளது. பெரும்பாலும் உயிரை பலிவாங்கும் ஆபத்தான நோய் என்று குரங்கு காய்ச்சலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உலகளவில் 100 க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது பெரும்பாலும் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளது. இருப்பினும், பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வகை வைரஸ் பரவலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்னர்.
குரங்கு காய்ச்சல் என்றால் என்ன?
ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்ததுதான் இந்த குரங்கு காய்ச்சல். இதில் வேரியோலா வைரஸ் (பெரியம்மை ஏற்படுத்தும்), வேக்சினியா வைரஸ் (பெரியம்மை தடுப்பூசியில் பயன்படுத்தப்படுகிறது) மற்றும் கவ்பாக்ஸ் வைரஸ் ஆகியவை அடங்கும்.
குரங்கு காய்ச்சல் பொதுவாக காய்ச்சல், குளிர், சொறி மற்றும் முகத்தில் புண்களை ஏற்படுத்துகிறது. 10 பேரில் ஒருவருக்கு இந்த நோய் ஆபத்தானதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?
குரங்கு காய்ச்சல் பெரியம்மையில் காணப்படும் அதே அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகிறது மற்றும் காய்ச்சலுடன் தொடங்குகிறது. தலைவலி, தசைவலி, சோர்வு போன்றவையும் ஏற்படலாம். பெரியம்மை மற்றும் குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளுக்கிடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், குரங்கு நிணநீர் கணுக்களை வீங்கச் செய்கிறது.
குரங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை என்ன?
வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு பெரியம்மை தடுப்பூசி பெரும்பாலும் செலுத்தப்படுகிறது. அவை குரங்கு காய்ச்சலுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தடுப்பு மருந்துகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம், சந்தேகத்திற்குரிய அனைத்து நபர்களையும் தனிமைப்படுத்தவும், அதிக ஆபத்துள்ளவர்களுக்கு பெரியம்மை தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கான குரங்கு நோய் தொற்றுகள் கண்டறியப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. பெரும்பாலான பாதிப்புகள் காங்கோவில் கண்டறியப்பட்டுள்ளன. இது ஆண்டுக்கு 6,000 ஆக இருக்கிறது. நைஜீரியாவில் ஆண்டுக்கு சுமார் 3,000 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்த நோய் பாலியல் ரீதியாக பரவுகிறதா என்பதை பிரிட்டிஷ் சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

source https://news7tamil.live/what-is-monkey-pox.html