வெள்ளி, 20 மே, 2022

தமிழ்நாடு, கேரளாவில் பணவீக்கம் குறைந்தது எப்படி?

 

தமிழ்நாடு, கேரளாவில் பணவீக்கம் குறைந்தது எப்படி?

கொரோனா பெருந்தொற்றுக்கு காலமாக இருந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் ,உலக பொருளாதாரம் தலைகீழாக மாறி போனது. வரலாற்றில் படித்த பஞ்சமும், நம் கண் முன்னே வந்து போனது. கொரோனா அலை ஓய்ந்த பின்னும், அது ஏற்படுத்திய ஆழமான காயம் இன்னும் ஆறாமல் உலக மக்களை வாட்டி வருகிறது.

மேற்கத்திய நாடுகளில் தான் அதிக பாதிப்பு, இந்தியாவில் பெரிய பாதிப்பு இல்லை என கூறப்பட்டது. ஆனால் இன்று இந்தியாவிலும் , கொரோனாவானது மெதுவாக சத்தமின்றி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. அது குறித்து பார்ப்போம்.

26 மாநிலங்களில் உச்சத்தை தொட்டுள்ளது பணவீக்க விகிதம். விதி விலக்காக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பிற மாநிலங்களைவிட குறைவான அளவே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒட்டு மொத்தமாக சில்லறை விற்பனை பண வீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் , 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக 7.79 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அதிகரித்து வரும் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் பணவீக்கம் அதிகரித்துள்ளது என ஆய்வு கூறுகிறது.

அதிகரித்த பணவீக்கத்தை , மாநில வாரியாக ஒப்பிட்டால் மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் , அரியாணா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ,அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநிலங்களில் 9 சதவீதத்தை தாண்டியுள்ளது பணவீக்கம். அதே சமயம் சில மாநிலங்களில் குறைவான அளவு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது. இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு 8.33 சதவீதம் என்ற அளவில் ஏற்பட்ட பணவீக்கமே, அதிகமானதாக உள்ளது என அப்போது விமர்சிக்கப்பட்டது. 6 முதல் 7 சதவீதத்தை தாங்கும் சக்தி கொண்ட பணவீக்கம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கையின் படி ,பணவீக்கம் அதிகரித்த மாநிலங்களின் , வீடுகளில் மாதாந்திர மற்றும் தினசரி பட்ஜெட்டையே பதம் பார்த்து இருக்கிறது.மேலும் நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கத்தை அளவிட்டுள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தேசியளவில் 7.8 சதவீதமாக பணிவீக்கம் அதிகரித்துள்ளது. மற்றொரு புறம் 7 மாநிலங்களில் 8 சதவீதம் அளவுக்கு பண வீக்கம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடுகிறது

ரஷ்யா – உக்ரைன் போரின் மறைமுக தாக்கம், பெட்ரோல் டீசல் மீதான மாறுபட்ட வரி விதிப்பு, பள்ளி கல்லூரி கட்டண உயர்வு, எரிபொருள், அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் , மொத்த செலவில் 25 சதவீதம் வரை , பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டை அதிகரிக்க செய்துள்ளது எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.

நாட்டையே அச்சுறுத்தும் பணவீக்கத்தில் ஏழைகள், நடுத்தர மக்கள் மட்டுமின்றி உயர் நடுத்தர மக்கள், பணக்காரர்களும் இதனால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த ஆய்வில்,மற்றொரு நம்பிக்கை தரும் அம்சமாக , 2 மாநிலங்கள் மிகக்குறைந்த அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன.


குறைந்த அளவு பாதிப்பை சந்தித்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு மற்றும் கேரளா இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது . மேற்கண்ட 2 மாநிலங்களில், தேசிய சராசரியை விட குறைவாக முறையே , தமிழ்நாட்டில் 5.4 மற்றும் கேரளாவில் 5.1 சதவீதம் என்ற அளவில் பணவீக்கம் உள்ளது . என்பதை அனைவரும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. தமிழ்நாடு,கேரளா மாநிலங்களில் உணவுப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துதல், மாநில அரசின் பொதுவினியோக திட்டத்தில் வழங்கப்படும் இலவசப்பொருட்கள், உணவு பொருட்கள் மட்டுமின்றி ,இதர அத்தியாவசிய பொருட்களை நியாயமான விலையில் வழங்குதல்,பெட்ரோலிய பொருட்களின் மீதான நியாயமான வரி விதிப்பு போன்ற காரணிகளால் ஓரளவுக்கேனும் தாக்குப்பிடிக்கும் சக்தியை மக்களுக்கு வழங்குகிறது. இதனால் தேசிய சராசரியை விட குறைவாக பணவீக்கம் உள்ளது குறிப்பிடதக்கது.

தெய்வத்தாலாகாது எனினும்,முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்ற வான்புகழ் வள்ளுவனின் கூற்றுக்கு ஏற்ப,மத்திய அரசின் ஆதரவு இல்லா விட்டாலும்,மாநிலத்தின் சுய கட்டமைப்பால் எதையும் தாங்கும் இதயம் போல் சுயமாக முன்னேறியுள்ளன தமிழ்நாடும் , கேரளாவும் என்றால் மிகையில்லை

ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ் 20 5 2022 

source https://news7tamil.live/india-inflation-rate-high-but-tamilnadu-and-kerala-is-low.html