சனி, 14 மே, 2022

4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்திய தமிழர்கள்.. புதிய டேட்டிங் மற்றும் அதன் முக்கியத்துவம்!

 Tamilnadu

Iron being used in Tamil Nadu back to 4200 years ago; Carbon dating evidence

அருண் ஜனார்த்தனன்

தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட கண்டுபிடிப்புகளின் கார்பன் டேட்டிங் 4,200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இரும்பு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை தெரிவிப்பதாக, தொல்லியல் துறை அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு இந்த வாரம் அறிவித்தது.

இதற்கு முன், இரும்பு உபயோகத்தின் ஆரம்ப சான்றுகள் நாட்டை பொறுத்தவரையில் கிமு 1900-2000 வரையிலும், தமிழ்நாட்டிற்கு கிமு 1500 வரையிலும் இருந்தன. ஆனால், சமீபத்திய சான்றுகள்’ தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாடு’  கிமு 2172 க்கு முந்தையவை என்பதை காட்டுகிறது.

4,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் இரும்பு பற்றி அறிந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ளது என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். “இரும்பின் பயன்பாட்டை மனிதகுலம் உணரத் தொடங்கிய பின்னரே அடர்ந்த காடுகள் வளமான நிலங்களாக மாற்றப்பட்டன. தமிழகத்தில் விவசாய பணிகள் தொடங்கியது தொடர்பான கேள்விகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பதில் அளித்துள்ளது” என்று ஸ்டாலின் கூறினார்.

கண்டுபிடிப்புகள்

பெங்களூரில் இருந்து சுமார் 100 கிமீ தெற்கில் உள்ள தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள மயிலாடும்பாறையில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டது. மயிலாடும்பாறை என்பது நுண்கற்காலம் (கிமு 30,000) மற்றும் ஆரம்பகால வரலாற்று (கிமு 600) காலங்களுக்கு இடைப்பட்ட பழங்கால கலாச்சாரப் பொருட்களைக் கொண்ட ஒரு முக்கியமான தளமாகும்.

“தொகரப்பள்ளி, கங்காவரம், சந்தூர், வேடர்தட்டக்கல், குட்டூர், கிட்லூர், சப்பமுட்லு மற்றும் கப்பலவாடி போன்ற பல தொல்பொருள் இடங்களுக்கு மத்தியில் இந்த தளம் அமைந்துள்ளது. இந்த முக்கியமான தொல்பொருள் இடங்கள் அனைத்தும் 10 கிமீ தொலைவில் உள்ளன.

மயிலாடும்பாறை என்ற தலைப்பில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பேராசிரியர் ராஜன் இந்த இடத்தை 1990 களில் கண்டுபிடித்தார், மேலும் அங்கிருந்து முதல் அகழ்வாராய்ச்சி 1990 களில் செய்யப்பட்டது. அசலரேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபியைப் (accelerator mass spectroscopy) பயன்படுத்திய டேட்டிங் முடிவுகள் கடந்த வாரம் வந்தன.

காலவரிசை மறுபரிசீலனை செய்யப்பட்டது

மனிதர்கள் இரும்புக் காலத்தில் நுழைந்த தேதிகள் உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மாறுபடும். இந்தியாவிலும், பல தசாப்தங்களாக தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளுடன் தேதி திருத்தப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டில், ராஜஸ்தானில் உள்ள அஹார் என்ற இடத்தில், கிமு 1300 இல் இரும்பின் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கர்நாடகாவில் உள்ள புக்காசாகராவில் இரும்பு உற்பத்தியைக் குறிக்கும் மாதிரிகள்’ கிமு 1530 க்கு முந்தையவை என்பது தெரியவந்தது.

மத்திய கங்கை பள்ளத்தாக்கில் உள்ள ராய்புராவில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இரும்பு உருகியதற்கான சான்றுகள் கிடைத்தன. இதனால் இந்த தேதி பின்னர் 1700-1800 BCEக்கு தள்ளப்பட்டது,

பின்னர் வாரணாசிக்கு அருகிலுள்ள மல்ஹர் மற்றும் வட கர்நாடகாவில் உள்ள பிரம்மகிரி ஆகிய இடங்களில் ஆய்வுகள் அடிப்படையில், இந்தியாவில் கி.மு.1900-2000 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு பயன்படுத்தியதற்கான சான்றுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட டேட்டிங் முடிவுகள், கி.மு. 1800 ஆண்டுகளுக்கு முன்னாடியே,  இரும்பு-தாது தொழில்நுட்பத்தின் ஆதாரங்களைக் காட்டுகின்றன.

சமீபத்திய கண்டுபிடிப்புக்கு முன், தமிழ்நாட்டின் இரும்பு உபயோகத்திற்கான ஆரம்ப சான்றுகள் மேட்டூருக்கு அருகிலுள்ள தெலுங்கனூர் மற்றும் மாங்காடு ஆகிய இடங்களில் கிடைத்தன, இது கிமு 1500 க்கு முந்தையது.

வரலாற்று முக்கியத்துவம்

இந்தியாவில் தாமிரத்தின் பயன்பாடு தோன்றியதாகக் கூறப்படும் சிந்து சமவெளியில் இரும்பு பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை (கிமு 1500). அதேநேரம் செம்பு கிடைக்காத மற்ற பகுதிகள் கற்காலத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரும்புத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​அது விவசாயக் கருவிகள் மற்றும் ஆயுதங்களின் உற்பத்திக்கு வழிவகுத்தது, இது பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கு முன்னால் ஒரு நாகரிகத்திற்குத் தேவையான உற்பத்திக்கு வழிவகுத்தது என்று மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சியுடன் தொடர்புடைய முன்னணி விஞ்ஞானி ஒருவர் கூறினார்.

பயனுள்ள கருவிகள் தாமிரத்தால் செய்யப்பட்டிருந்தாலும், இவை உடையக்கூடியவை மற்றும் இரும்புக் கருவிகளைப் போல வலுவாக இல்லை. அடர்ந்த காடுகளை அழிக்கவும், நிலத்தை விவசாயத்தின் கீழ் கொண்டு வரவும் செப்புக் கருவிகளைப் பயன்படுத்துவது கடினமாக இருந்திருக்கும் -அதனால்தான் மனிதர்கள் இரும்பை பயன்படுத்தத் தொடங்கிய பின்னரே காடழிப்பு நடந்ததாக விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.

நமது இரும்புக் காலம் கிமு 1500 முதல் கிமு 2000 வரையிலான என்பதற்கான சமீபத்திய சான்றுகளைக் கொண்டு, நமது கலாச்சார விதைகள் கிமு 2000 இல் போடப்பட்டது என்று நாம் கருதலாம். மேலும் இரும்புத் தொழில்நுட்பத்தால் தூண்டப்பட்ட சமூக-பொருளாதார மாற்றங்கள் மற்றும் பாரிய உற்பத்தியின் பலன் அதன் முதல் பலனை கிமு 600 இல் கொடுத்தது – தமிழ் பிராமி எழுத்துக்கள்,” என்று விஞ்ஞானி கூறினார்.

கலாச்சாரம் மற்றும் அரசியல்

தமிழ் பிராமி எழுத்துக்கள் கிமு 300 இல் தோன்றியதாக நம்பப்பட்டது, ஆனால் 2019 இல் ஒரு முக்கிய கண்டுபிடிப்பு கிமு 600 க்கு அதைத் தள்ளியது.

இந்த டேட்டிங் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் தமிழ்நாடு/தென்னிந்தியாவின் சங்க காலத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்தது. இதுவும், சமீபத்திய கண்டுபிடிப்புகளும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை.

மதுரைக்கு அருகில் உள்ள கீழடி உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் அடிப்படையில் எழுத்துகளின் காலக்கணிப்பு, இந்திய தொல்லியல் துறை (ASI) மேம்பட்ட கார்பன் டேட்டிங் சோதனைகளுக்கு செல்லாததால் சர்ச்சைக்குள்ளானது, மேலும் ஆய்வைத் தொடங்கிய ஒரு இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் மாநிலத்திற்கு வெளியே மாற்றப்பட்டார். பிறகு 2019 கண்டுபிடிப்புகள் மாநில அரசாங்கத்தின் முயற்சிகளில் இருந்து வெளிவந்தன.

இந்திய வரலாற்றை தமிழர் மண்ணில் இருந்து மாற்றி எழுத வேண்டும் என்பதை அறிவியல் முறைகள் மூலம் நிலைநாட்டுவதே மாநில அரசின் இலக்கு என்று சட்டப்பேரவையில் ஸ்டாலின் கூறினார். கீழடியில் காணப்படும் கிராஃபிட்டி மற்றும் சிந்து சமவெளி நாகரீகத்தின் அடையாளங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் பணியை மாநில தொல்லியல் துறை தொடங்கும் என்றார்.

source https://tamil.indianexpress.com/explained/iron-being-used-in-tamil-nadu-back-to-4200-years-ago-carbon-dating-evidence-453528/