வெள்ளி, 20 மே, 2022

மதமாற்ற தடைச் சட்டம்

 18 5 2022

பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி, கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட், மதமாற்ற எதிர்ப்பு மசோதாவுக்கு வழி வகுக்கும் மத சுதந்திர உரிமைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ ஆளுநரை சந்தித்து ஒப்புதல் வழங்குவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்த ஒரு நாள் கழித்து இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது.

கர்நாடகாவில் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளும் மற்றும் கிறிஸ்தவ குழுக்களும் எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளதை அடுத்து, ”கடந்த ஆண்டு டிசம்பரில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்து தற்போது அவசரச் சட்டமாக மாறியுள்ளது. அடுத்த அமர்வில் மேல்சபை முன் தாக்கல் செய்யப்படும்” என்று உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறினார்.

கடந்த வாரம் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மதமாற்றத் தடைச் சட்டத்தை உடனடியாகக் கொண்டு வருவதற்கு வசதியாக, அவசரச் சட்டமாக மசோதாவை வெளியிடுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. டிசம்பரில் சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த மசோதா, பாஜகவுக்கு போதிய எண்ணிக்கை இல்லாத நிலையிலும், மசோதா தோல்வி அடைந்து விடும் என்ற பயம் இருந்ததாலும் சட்டசபையில் முன்மொழியப்பட்டது.

75 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில், காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளுக்கு 41 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 32 உறுப்பினர்களும், சுயேச்சை உறுப்பினர்கள் இருவர் உள்ளனர். ஜூன் 3-ம் தேதி 7 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் போது, ​​பாஜக அறுதிப் பெரும்பான்மை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பல்வேறு சூழ்நிலைகளில் மதமாற்றத்தைத் தடுப்பதை கர்நாடக மதச் சுதந்திர உரிமைப் பாதுகாப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த அரசாணையில், “தவறான சித்தரிப்பு, வலுகட்டாயம், தேவையற்ற செல்வாக்கு, வற்புறுத்தல், வசீகரம் அல்லது மோசடியான வழிகள் அல்லது திருமணத்தின் மூலம் ஒரு மதத்திலிருந்து ஒருவரை நேரடியாகவோ அல்லது வேறு வழிகளிலோ மதமாற்றம் செய்யவோ அல்லது மாற்றவோ முயற்சிக்கவோ கூடாது அல்லது எந்த ஒரு நபரும் மதமாற்றத்திற்கு உடந்தையாகவோ அல்லது சதி செய்யவோ கூடாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட சட்டத்தின்படி, மதமாற்றம் குறித்த புகார்களை குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அல்லது மதம் மாறிய நபரின் சக ஊழியர் கூட தாக்கல் செய்யலாம்.

சட்டத்தை மீறி பொதுப்பிரிவினரை மதமாற்றம் செய்பவர்களுக்கு 3-5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.25,000 அபராதமும், மைனர்கள், பெண்கள் மற்றும் SC மற்றும் ST சமூகங்களைச் சேர்ந்த நபர்களை மதமாற்றம் செய்பவர்களுக்கு 3-10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும்.

எவ்வாறாயினும், “தனது உடனடி முந்தைய மதத்திற்கு திரும்பும்” நபரின் விஷயத்தில், “இந்தச் சட்டத்தின் கீழ் அது ஒரு மாற்றமாக கருதப்படாது” என விலக்கு அளிக்கிறது.

source https://tamil.indianexpress.com/india/karnataka-governor-thawar-chand-gehlot-nod-ordinance-anti-conversion-bill-455666/