பொது இடங்களில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரங்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.
மஞ்சப்பை விற்பனை இயந்திரம் இறுதியாகிவிட்டது. மலிவு விலையில் துணிப்பைகள் பொதுமக்களுக்கு எளிதாகக் கிடைக்கும் வகையில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் நடமாடும் பேருந்து நிலையம், சந்தை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த இயந்திரங்கள் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/prototype-of-manjapai-vending-machine-ready.html