வங்க கடலில் ஆந்திராவின் மச்சிலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி, இன்று காலை புயலாக வலுவிழந்தது. நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
அசானி புயல் காரணமாக, தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. அதேபோல், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று முதல் பரவலாக மழை பெய்கிறது
இந்நிலையில் இன்று(மே.11) சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அசானி புயல் காரணமாக இன்று சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ராஜமுந்திரி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் விமானங்கள் காலதாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/asani-cyclone-17-flights-cancelled-on-chennai-452261/