வியாழன், 12 மே, 2022

ஆதார் கார்டில் இத்தனை வகைகளா? சிறப்பு அம்சங்கள் என்ன?

 

இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டு இன்றியமையாத ஆவணமாக மாறிவிட்டது. ஆதார் இல்லாமல் எந்த சேவையையும் பெறுவது கடினம். ஆனால் ஆதார் அட்டை தகவல்கள் திருடப்படவும் வாய்ப்பு உள்ளது. இதற்காக இந்திய தனித்துவ ஆணையம் பாதுகாப்பான ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது. அதோடு மக்களின் எளிய அணுகலுக்காக 4 வகையான ஆதார் அட்டைகளை தனித்துவ ஆணையம் வழங்கி வருகிறது. அந்த எந்த வகையான அட்டைகள் என்பதை இப்போது பார்ப்போம்.

ஆதார் அட்டை மற்ற அடையாளச் சான்றுகளிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் அதில் நம் அனைவரின் பயோமெட்ரிக் தகவலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அனைவரது கைரேகைகள் மற்றும் கண்களின் விழித்திரை ஸ்கேன் செய்யப்படுகிறது. ஆகையால், இதன் பிரத்யேக அம்சம் காரணமாக ரேஷன் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற பிற அடையாளச் சான்றுகளிலிருந்து ஆதார் கார்டு மிகவும் வேறுபட்டது. ஆதார் அட்டையில், அட்டைதாரரின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி, முகவரி போன்ற தேவையான அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அனைத்து வகையான நிதி தொடர்பான சேவைகளுக்கும் ஆதார் தேவைப்படுகிறது. குறிப்பாக வங்கி கணக்கு தொடங்க, கடன் பெற ஆதார் அவசியமாகியது. மேலும், குழந்தைகளை பள்ளி, கல்லூரியில் சேர்க்க, ரயில் அல்லது விமான பயணத்திற்கு, ​​ஹோட்டல் முன்பதிவு செய்ய, சொத்து வாங்க, சந்தையில் முதலீடு செய்ய என பல இடங்களில் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது.

பொதுமக்களின் வசதிக்காக, பல வகையான ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த அனைத்து ஆதார் அட்டைகளும் ஒரே தனித்துவமான அடையாள எண்ணைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டையின் வகைகள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

அசல் ஆதார் கார்டு 

அசல் ஆதார் கார்டு ஆனது, உங்கள் பயோமெட்ரிக் தகவல்கள் சேமிக்கப்பட்ட பின்னர், உங்களது வீட்டு முகவரிக்கு யுஐடிஏஐ மூலம் அனுப்பப்படுகிறது. இது ஒரு தடிமனான ஆதார் அட்டையாகும். இதில் நமது தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. யுஐடிஏஐ எந்த கட்டணமும் இல்லாமல் இந்த ஆதார் அட்டையை வீட்டுக்கு அனுப்புகிறது.

mAadhaar அட்டை

mAadhaar என்பது ஒரு மொபைல் செயலி ஆகும். இதன் மூலம் ஆதார் அட்டை மென் நகல் (Soft Copy) வடிவத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியில், ஆதார் விவரங்களை நிரப்பி ஆதாரை சேவ் செய்து கொள்ளலாம். ஆதார் அட்டையில் எந்த விதமான அப்டேட் செய்தாலும், MAadhaar கார்டு தானாகவே புதுப்பிக்கப்படும். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

பிவிசி ஆதார் அட்டை

பிவிசி ஆதார் அட்டை ஒரு ATM கார்டு போல் இருக்கும் அட்டையாகும். இந்த ஆதார் அட்டை ஸ்பெஷல் ஆர்டர் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டையில் டிஜிட்டல் QR குறியீடும் உள்ளது. அதில் உங்களின் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். யுஐடிஏஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.50 செலுத்தி இந்த கார்டை ஆர்டர் செய்யலாம். இந்த அட்டையின் சிறப்பம்சம் என்னவென்றால், இது கிழியாது, தண்ணீராலும் பாதிக்கப்படாது. 

மின் ஆதார் அட்டை

மின்-ஆதார் அல்லது இ- ஆதார் என்பது ஆதார் அட்டையின் மின்னணு வடிவமாகும். இந்த கார்டில் பாதுகாப்பான QR குறியீடு உள்ளது. அதை நீங்கள் ஸ்கேன் செய்து அனைத்து தகவல்களையும் குறிப்பிடலாம். கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளதால், இந்தக் கார்டைத் திறக்க கடவுச்சொல் தேவை. ஆதார் அட்டையை பாதுகாப்பாக வைத்திருக்க UIDAI மறைக்கப்பட்ட மின்-ஆதார் அட்டையையும் (Masked E-Aadhaar) வழங்குகிறது. இந்த அட்டையில் கடைசி நான்கு எண்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். உங்கள் ஆதார் அட்டையின் தகவல்கள் திருடப்படாமல் இருக்க இது உதவும். 

source https://tamil.indianexpress.com/business/different-types-of-aadhaar-cards-issued-by-uidai-452673/