ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை 142 சட்டப்பிரிவின் படி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. ராஜீவ் காந்தி படுகொலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட அனுஷ்யா, பேரறிவாளன் விடுதலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அனுஷ்யா டெய்ஸி ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: பேரறிவாளன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகத்தானே உதவி செய்தார். அவரை ஏன் நாடு கடத்தக் கூடாது. ஏன் ஒரு தமிழக முதலமைச்சர் அவரைப் போய் கட்டி அணைக்கிறார். அவர் என்னமோ ஒரு பெரிய சுதந்திர வீரர் மாதிரி வெற்றி விழா கொண்டாடுகிறார்கள்.
ராம்ஜெத் மலானியை வைத்து வழக்கு நடத்தியதாகக் கூறுகிறார்கள். அவருக்கு ஒரு வழக்கில் ஆஜராக 5 லட்சம் ரூபாய் ஃபீஸ் தரவேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பணம் எப்படி வருகிறது.
நளினியுடைய மகள் தமிழச்சி லண்டனில் டாக்டருக்கு படிக்கிறார் என்று கூறுகிறார்கள். அப்போது, அவரை யார் பணம் செலவு செய்து படிக்க வைக்கிறார்கள். பேரறிவாளன் விடுதலை கொண்டாடுகிறவர்களுக்கு ஈவு இறக்கமே இல்லையா? அவர்களுடைய தாயோ தகப்பனோ இதில் செத்துபோய் இருந்தால், இவர்கள் கொண்டாடுவார்களா?
முதலமைச்சர் ராஜீவ் காந்தி நினைவு நாளில் அவருடைய சிலைக்கு மாலை போடுகிறார். கொலைகாரனுக்கு வரவேற்பு கொடுக்கிறார். அப்போது, ஒரு நல்ல தண்ணீரும் சாக்கடை தண்ணீரும் ஒரே பைப்பில் இருந்து வருமா?
அடுத்தவர்கள் உயிர் இவர்களுக்கு பெரியதாக தோன்றவில்லை. ஆனால், இவர்கள் உயிரை எடுக்கக்கூடாது என்று அத்தனை கோர்ட்டுகளுக்கு சென்று வாதாடுகிறார்கள். இதைத் தாய்ப் பாசம் என்கிறார்கள் என்று பேரறிவாளனி விடுதலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/rajiv-gandhi-assassination-victim-former-police-officer-anushya-opposed-to-perarivalan-release-458836/