சனி, 28 மே, 2022

தேசிய கல்விக் கொள்கை: ஆளுனர் ரவி

 28 5 2022 



திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், தேசிய கல்வி கொள்கை குறித்த 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. இதில் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த கருத்தரங்கத்தில் இந்தியாவில் உள்ள 38 மத்திய பல்கலை கழகத்தில் உள்ள துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் பேசிய ஆர் என் ரவி, “தேசிய கல்விக் கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுதொடர்பாக அனைத்து துணைவேந்தர்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதற்கு வழிவகுக்கும். இந்த கருத்தரங்கில் பங்கேற்ற ஒவ்வொருவரும் உணர்வுபூர்வமான நாட்டுப்பற்றுடன் செயல்பட வேண்டும்.

தேசிய கல்வி கொள்கையால் கல்வித்துறையில் புதிய சீர்திருத்தம், புதிய மறுமலர்ச்சி ஏற்படும். தொலைநோக்கு பார்வையோடு தேசிய கல்வி கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையின் அடித்தள தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். இதனை முழுமையாக படித்தால்தான் புரிந்து கொள்ள முடியும். அப்போதுதான் அதனை செயல்படுத்த முடியும்.கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார்” என தெரிவித்தார்.

இந்தியத்துவத்தை கருத்தில் கொண்டு கல்வியை மாற்றியமைக்கும் உணர்வில் அதைச் செயல்படுத்த பங்கேற்பாளர்களை ஆளுநர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்கின்ற சூழ்நிலையில் தமிழ்நாடு இல்லை. அது சமூக நீதிக்கு எதிரானது. எழை எளிய மாணவர்களை வஞ்சிக்கக்கூடியது. தமிழ்நாட்டிற்காகவே முதல்வர் மாநில கல்வி கொள்கையை இயக்கிட அறிவுறுத்தியுள்ளார். அது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-today-new-education-policy-rn-ravi-ponmudi-speech-459758/