வெள்ளி, 20 மே, 2022

அதிகாரப்பகிர்வு – மத்திய அரசோடு முரண்பட்ட உச்சநீதிமன்றம்

 

அதிகாரப்பகிர்வு – மத்திய அரசோடு முரண்பட்ட உச்சநீதிமன்றம் 20 5 2022

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மத்திய அரசோடு முரண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்பு மற்றும் மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. அகில இந்திய ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்காக 27% இட ஒதுக்கீடு செல்லும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகியவற்றில் தமிழ்நாட்டின் குரலை அழுத்தமாக நீதிமன்றம் பதிவு செய்யும் வகையில் தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பேரறிவாளன் விடுதலை வழக்கில், அதிகாரம் தொடர்பான விஷயத்தை உச்சநீதிமன்றம் அழுத்தமாக கூறியுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவை நிறைவேற்றிய எழுவர் விடுதலை விவகாரத்தில், மாநில அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதிபடுத்தி உள்ளார்கள். ஆர்.என். ரவி – மு.க. ஸ்டாலின் முரண்பாடு:
தமிழ்நாட்டின் அரசியலை கூர்ந்து நோக்குபவர்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் முரண்பாடு புரியும். தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் முதலில் கிடப்பில் போட்டதும், பிறகு அதே மசோதாவை எந்த திருத்தமும் செய்யாமல் மீண்டும் ஆளுநருக்கே அனுப்பி வைத்ததையும் பார்த்தோம். இதன் தொடர்ச்சி, துணை வேந்தர் நியமனத்தில் யாருக்கு அதிகாரம், மாநில அமைச்சரவை முடிவு பெரிதா, அல்லது ஆளுநரின் அதிகாரம் பெரிதா என்ற முரண்பாட்டை நோக்கி நகர்ந்தது.
பேரறிவாளன் விவகாரத்தில் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் தற்போது அவரின் விடுதலையையும் உறுதி செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் எதை காட்டுகிறது. ஆளுநரின் நடவடிக்கைகளிலிருந்து அவர் சட்டத்தை மீறி செயல்பட்டதால் அதனை எல்லையில் பேரறிவாளன் விடுதலை கிடைத்ததா என்பதை ஆராய வேண்டி உள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவைக்கே அதிகாரம்”:
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு உடன் நிகழ்வாக அமைச்சரவைக்கு அதிகாரமா அல்லது ஆளுநருக்கு அதிகாரமா என்ற கோணத்திலும் கூடுதல் கவனத்தோடு கையாண்டது. பேரறிவாளன் விடுதலை வழக்கை சட்ட ரீதியான வெற்றியாக மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, மாநில சுயாட்சிக்கு கிடைத்த வெற்றி என்ற வகையிலும் வழக்கை கொண்டாடுகிறார்கள். அதற்கும் ஒரு கோணம் இல்லாமல் இல்லை. மாநிலத்தின் உரிமையை பேரறிவாளன் வழக்கு நிலைநாட்டியுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடுதலை வழக்கு கடந்து வந்த பாதையை உற்று நோக்கும் போது சர்வதேச மனித உரிமை பிரகடனங்களுக்கு சவால் விடும் அளவிற்கு ஒரு அரசியல், சமூக, சட்டப்போராட்டம் இங்கு நடந்திருப்பது புரிய வரும்.
பேரறிவாளன் விடுதலை குறிப்பிட்ட சமூக பொருளாதார அரசியல் சூழலில் தான் வழக்காக தொடுக்கப்படுகிறது. செங்கொடி மரணம், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எழுவர் விடுதலைக்காக காட்டிய முனைப்பு. அதற்காக தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்கள் இந்த பின்னணியில் தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு எழுவரையும் விடுதலை செய்வதாக ஜெயலலிதா அறிவித்தார். ராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரித்ததால், எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் உத்தரவு மத்திய அரசுக்கு தான் உள்ளது என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இங்கு தான், யாருக்கு அதிகாரம் என்ற பேச்சு எழுகிறது. அதற்கு முன்பாக கூட, பேரறிவாளன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த கருணை மனுக்கள் ஆளுநர் தொடங்கி குடியரசு தலைவர்கள், அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல், பிரனாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்த் வரை நிராகரிக்கப்பட்டதையும் பார்க்கலாம்.
எழுவர் விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய நீதிமன்றம் :

11 ஆண்டுகளுக்கும் மேலாக கருணை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டதால் பேரறிவாளன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது. பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

2014 பிப்ரவரி 18ல் பல ஆண்டு காலம் மூவரது கருணை மனுக்களும் எந்தக் காரணமுமின்றி நிலுவையில் இருந்ததால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனை ரத்துசெய்யப்படுவதாக சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதன் தொடர்ச்சியாகத் தான், இந்த வழக்கில் மத்திய – மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாஸன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

2012 ஆம் ஆண்டுக்கு பிறகு எழுவர் விடுதலை விஸ்வரூபம் எடுத்தாலும் கூட, 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, 7 தமிழர் விடுதலை குறித்து அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று ஆணையிட்டது. அதையடுத்து செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி, 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆணையிடும்படி ஆளுநருக்குப் பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றியது.

இங்கு தான், எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்ற பேச்சு எழுந்தது. அதாவது, உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு 161-வது பிரிவின்படி ஆளுநரே முடிவெடுக்கலாம் என உறுதி அளிக்கிறது. ஆனாலும் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார். எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை 2018 செப்டம்பர் 9ல் 7 பேரையும் விடுவிக்க தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதுவும் கிடப்பில் போடப்பட்டது. எழுவரை விடுவிக்கும் முடிவை ஆளுநரே எடுக்கலாம் என்று கூறிய உச்சநீதிமன்றம், மாநில அமைச்சரவைக்கு தான் அதிகாரம் உள்ளது என்று கூறி அதிகாரத்தின் பலத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவைக்கு வழங்கியுள்ளது. அதாவது, உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு வழங்கிய தீர்ப்புக்கும், நீதிபதி நாகேஸ்வரராவ் வழங்கிய தீர்ப்புக்கும் இடையில் நடந்த அரசியல் பொருளாதார நடவடிக்கைகளையும் கவனித்து பார்க்க வேண்டியுள்ளது.

சட்டங்களே ஒரு குறிப்பிட்ட அரசியல் பொருளாதார சூழலில் தான் கொண்டு வரப்படுகிறது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது, தமிழ்நாட்டின் அரசியல் சூழலை ஒட்டியும், மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக சட்டத்தின் மீது நடத்தும் மதிப்பீடுகளைப் பொருத்தும் புதிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்கு நீதிமன்றம் வந்து சேர்ந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் வழக்காக மாறிய பேரறிவாளன் விடுதலை:

யாருடைய அதிகாரம் மேலே வருகிறதோ அந்த அதிகாரத்தோடு முரண்படும் மற்றொரு ஆளும் வர்க்கம் மேல் கையெடுக்க வைக்கும். மத்திய அரசு மாநில அரசின் மீது செல்வாக்கு செலுத்துகிறது என்றால், அதற்கு எதிராக மாநில அரசு தனது உரிமையை மீட்க மீள் கையெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், ஆளுநரின் அதிகாரம் மேலே வரும் போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை மேல் கையெடுக்கிறது. இது தான், பேரறிவாளன் விடுதலை விவகாரத்திலும் வெளிப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற்போல் தான், பேரறிவாளனுக்காக சட்டப் போராட்டம் நடத்தினார். தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசியல் பிரச்னையாக இது மாறியது. பின்னர், அமைச்சரவையின் முடிவாக பரிணமித்தது. அதன் முடிவாக, தமிழ்நாடு அரசே தன் சொந்த வழக்காக பேரறிவாளன் விடுதலை வழக்கை நடத்தியது.

அதாவது, பேரறிவாளன் விடுதலைக்காக தமிழக அரசே வழக்கை நடத்தும் அளவிற்கு இந்த விவகாரம் அரசியல் நடவடிக்கையாக மாறியது. இந்த அரசியல் பிரச்னை தமிழ்நாடு மக்களின் மனிதாபிமான விஷயமாகவும் மாறியது. அரசியல் உரிமை சார்ந்தும் பரிணமித்து அடுத்த அழுத்தத்தில் மத்திய அரசோடு முரண்பாட்டை கையில் எடுத்து பேரறிவாளன் விடுதலையை சாத்தியமாக்கியுள்ளது.

source https://news7tamil.live/perarivalan-case-conflict.html