ஞாயிறு, 29 மே, 2022

இடைவிடாமல் தொடரும் இல்லம் தேடி கல்வி: புதுக்கோட்டை மகிழ்ச்சி

 

கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி அல்லது இழப்புகளைக் குறைத்திடும் வகையில் இல்லம் தேடி கல்வி என்கிற திட்டம் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.

இந்த இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள் சிலர் கோடைகாலத்தில் இயல்பான வகுப்பை தவிர்த்து வாசித்தல்,கதை சொல்லுதல் போன்ற செயல்களை மேற்கொள்ளலாம் என்றும்,இல்லம் தேடி கல்வி மாலை நேரங்களில் செயல்படுவதால் தொடர்ந்து நடத்தலாம் என்றும், மாணவர்களும் இல்லம் தேடி கல்வி வருவதற்கு ஆர்வமாக உள்ளனர் என்றும் அவர்களது ஆர்வத்தை தடுக்க கூடாது என்றும்,விடுமுறை காலங்களில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள் எனவே விளையாட்டு வழி சொல்லித்தரலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதில் ஒரு சில தன்னார்வலர்கள் கோடை விடுமுறை என்பதால் மாணவர்கள் சிலர் வெளியூர் சென்று விடுவார்கள் என்றும் தாங்களும் குடும்பத்துடன் வெளியூர் செல்ல வேண்டும் ,போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும் அதற்காக கோடை கால விடுமுறை வேண்டும் என இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற சிறப்புப் பணி அலுவலரும் விடுமுறை வேண்டும் என நினைக்கும் தன்னார்வலர்கள் மே 14 முதல் மே 31 ஆம் தேதி வரை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் தன்னார்வலர்கள் விடுமுறையில் செல்லும் நாட்கள் குறித்த விவரத்தினை மையத்தில் பயிலும் மாணவர்களுக்கும் தொடர்புடைய பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆர்வம் உள்ள தன்னார்வலர்கள் தொடர்ந்து இல்லம் தேடி கல்வி மையங்களை நடத்தலாம் என தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கல்வி மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் பரம்பூர் குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட மாணவர்களுக்கு பரம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  இல்லம் தேடி கல்வி மையங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று கோடை விடுமுறை இல்லாமல் தொடர்ந்து மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்று வருகிறது.

இதில் தொடக்க நிலை தன்னார்வலர்களாக மு.அனுராதா,ரா. சித்திரா, பா.புனிதவள்ளி ஆகியோரும் உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களாக சத்தியாவதி,ரெ.நதியா ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். தன்னார்வலர்கள் அனைவரும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தங்களை இணைத்து கொண்ட நாள் முதல் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மாலை நேர வகுப்பு எடுப்பது மட்டுமல்லாமல் மாணவர்களின் நலன் கருதி காலையில் பள்ளிகளுக்கு சென்று பாடம் நடத்தி வருகின்றனர்.

மாலையில் மாணவர்களுக்கு பாடல்கள்,கதைகள்,விளையாட்டுகள், விடுகதைகள் கற்றுத் தருகிறார்கள். இதனால் மாணவர்கள் தங்களது நினைவாற்றல்,படைப்பாற்றல்,சிந்திக்கும் மேம்படுத்துதல் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்கின்றனர். தன்னார்வலர்கள் மாணவர்கள் விரும்பி செய்வதையே செயல்பாடுகளாக மாற்றி எளிய பாடப் பொருள்களாக குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கின்றனர். இதனால் மாணவர்கள் பாடப் பொருளை ஆர்வமுடன் கற்றுக் கொள்கின்றனர்.

மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் நோக்கில் தனித்திறன் கொண்டாட்டம், அறிவியல் மனப்பான்மையை வெளிக்கொணரும் நோக்கில் அறிவியல் கொண்டாட்டம் நடத்துகின்றனர். இதனால் மாணவர்கள் கற்றலில் கொண்டாட்டமாக ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வலர்கள் புத்தகப் பூங்கொத்து மூலம் வாசிக்க கற்றுக் கொடுக்கிறார்கள். இதன் மூலம் மாணவர்களும் தங்களது வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளனர்.

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் தாங்களே கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகளை தயார் செய்யும், இல்லம் தேடி கல்வி மையம் மூலம் வழங்கப்பட்ட கற்பித்தல் அட்டைகளை கொண்டும்,பள்ளியில் வழங்கப்பட்டுள்ள கணித உபகரணங்கள், ஆங்கில உபகரணங்கள்,அறிவியல் உபகரணங்களை தலைமையாசிரியரிடம் பெற்று பாடம் நடத்தி வருவதால் மாணவர்கள் ஆர்வமுடன் பாடங்களை கற்று வருகின்றனர்

குழந்தைகளுக்கு நல்ல நண்பர்களாக தன்னார்வலர்கள் விளங்குவதால் அவர்களை அன்போடு அம்மா,அக்கா என்று அழைத்து மகிழ்ச்சியோடு கல்வி கற்று வருகிறார்கள்.பள்ளியின் தலைமையாசிரியர் முருகையாவும் கோடை விடுமுறை காலத்திலும் தினமும் மாலை நேரங்களில் இல்லம் தேடி கல்வி மையத்தை பார்வையிட்டு தன்னார்வலர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கியும், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்து பாராட்டியும் வருகிறார்.

இவ்வாறு பரம்பூர் பள்ளியில் சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையத்தை இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் முனியசாமி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் சிறப்பாக செயல்பட்டு வரும் தன்னார்வலர்களின் பணியையும்,சிறப்பாக கல்வி கற்று தங்களது கற்றல் இழப்பை ஈடுகட்டிக் கொண்டிருக்கும் மாணவர்களையும் வெகுவாக பாராட்டினார்.

பின்னர் இது குறித்து மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் கு.முனியசாமி கூறியதாவது:

இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் அவர்களின் வழிகாட்டுதல்படியும்,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி வழிகாட்டுதல் படியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அதே போல் கோடை விடுமுறையில் செயல்படும் இல்லம் தேடி கல்வி மையங்களில் பணிபுரியும தன்னார்வலர்கள் மாணவர்களை நூலகங்களுக்கு அழைத்துச் சென்று நூல்கள் படிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறார்கள். மாணவர்களின் வாசித்தல் திறனை அதிகப்படுத்த கூகுள் ரீட் அலாங் செயலி மூலம் மாணவர்களுக்கு வாசிக்க கற்றுக் கொடுக்கிறார்கள்.

எதிர் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட வேண்டிய சிறப்பு முயற்சிகள் குறித்து தொடர்புடைய பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக்களுடன் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

இவ்வாறு கோடைவிடுமுறையிலும் இல்லம் தேடி கல்வி மையங்களில் தன்னார்வலர்கள் பணிபுரிவதால் இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்றார்.

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் கூறியதாவது: இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததில் மனம் மகிழ்வாக உள்ளது.குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் வேளையில் அவர்களிடம் இருந்தும் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொள்கிறோம்..ஒரு சில மாணவர்களின் தனித்திறமைகளை காணும் பொழுது வியப்பாகவும் இருக்கிறது.

தற்பொழுது இல்லம் தேடி கல்வி மையங்கள் அனைத்தும் மாணவர்கள் விரும்பி கல்வி கற்க வரும் இடமாக மாறியுள்ளது என்றால் அது மிகையாகாது.

க.சண்முகவடிவேல் 


source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-education-come-to-home-system-in-pudukottai-student-happiness-460138/