இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் மே 23ஆம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்.
போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் நபரின் மீதும் வழக்குப் பதிவு செய்தும் வருகின்றனர்.
சென்னையில் ஜனவரி 1 முதல் மே 5ஆம் தேதி வரை இருசக்கர வாகன விபத்துக்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். 841 பேர் காயமடைந்துள்ளனர். இதில், ஹெல்மெட் அணியாமல் பயணித்த 80 இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற 18 பேர் உயிரிழந்தனர். 714 இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற 127 பேர் காயமடைந்துள்ளனர்.
எனவே, மே 23ஆம் தேதி முதல் சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணிவதை கண்காணிக்க போக்குவரத்துக் காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். ஹெல்மெட் அணியாதவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/helmet-mandatory-for-two-wheeler-riders-in-chennai.html